தற்போதைய செய்திகள்

2,500 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கியது – பொதுமக்கள் உற்சாகம்

சென்னை

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரூபாய் 2,500 வழங்கப்படும் என, கடந்த டிசம்பர் மாதம் 19-ந்தேதி அன்று சேலம் மாவட்டம், எடப்பாடி ஊராட்சி ஒன்றியம், இருப்பாளியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார்.

இத்திட்டம், ஜனவரி 4-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்தார். அத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு துண்டு கரும்புக்கு பதிலாக ஒரு முழுக் கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு நல்ல துணிப்பை ஆகியவை கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 5,604.84 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதையடுத்து, டிச.21 அன்று தலைமைச் செயலகத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி மற்றும் சேலை வழங்கும் திட்டத்தை அடையாளமாக சிலருக்கு வழங்கி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கொரோனா பரவல் மற்றும் கூட்ட நெரிசலை தவிர்க்க பொங்கல் பரிசு விநியோக முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ரேசன் கார்டுதாரர்கள் எந்த தேதியில் எந்த நேரத்தில் வர வேண்டும் என்பது குறித்து ஏற்கனவே வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. காலையில் 100 பேருக்கும், மாலையில் 100 பேருக்கும் வழங்கப்படுகிறது. இதனால் ரேசன் கடைகளில் கூட்டம் முண்டியடிக்கும் நிலை இருக்காது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் பொங்கல் பரிசுத்தொகுப்பை குடும்ப அட்டைதாரர்கள் வாங்கிச் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவித்தபடி, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. ரேஷன் கடைகளில் ஜனவரி 13 வரை காலையில் 100 பேர், மதியம் 100 பேருக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்க பணத்தை பொதுமக்கள் உற்சாகமாக வாங்கி சென்றனர்.அனைத்து ரேசன் கடைகளிலும் பாதுகாப்புக்காக போலீசாரும் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

ரொக்க பணத்தை கவர்களில் போட்டு வழங்கக்கூடாது என்று ரேசன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொருவருக்கும் ரூ.2,500 ரொக்கப் பணத்தை எண்ணி வெளிப்படையாகவே வாடிக்கையாளர்களிடம் ஊழியர்கள் வழங்கினார்கள்.தொடர்ந்து 13-ந்தேதி வரை பொருட்கள் வினியோகம் நடைபெறுகிறது.