தற்போதைய செய்திகள்

260 மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்

திருவண்ணாமலை

ஆரணியில் 260 மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி தலைமை வகித்தார். தூசி கே.மோகன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 260 மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டைகளை வழங்கி பேசியதாவது:-

இதுவரை மாற்று திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மட்டுமே நடைபெற்று வந்தது. முதலமைச்சரின் ஆணைக்கினங்க தாலுகா வாரியாக முகாம் நடத்தப்படும். முகாமிற்கு அதிகாரிகள் சென்று மாற்றுத் திறனாளிகளை கண்டறிந்து புதிய அடையாள அட்டைகள் வழங்க ஆணையிட்டதின் பேரில் முதல்கட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி தாலுகாவில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இம்முகாமில் 260 பேருக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை பெற்றவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படும். உதவித்தொகை வழங்கப்படும். மேலும் தேவையான உபகரணங்கள், ஸ்கூட்டி, மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்டவைகள் வழங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.