தற்போதைய செய்திகள்

2742 பயனாளிகளுக்கு ஒரு வாரத்தில் தாலிக்கு தங்கம்- திருமண நிதியுதவி-அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தகவல்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2742 பயனாளிகளுக்கு ஒரு வாரத்தில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கப்படும் என்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தூசி கே. மோகன் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கலந்து கொண்டு ஆரணி, மேற்கு ஆரணி, சேத்பட், பெரணமல்லூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 346 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 37 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் பட்டம் படித்த பெண்களுக்கு ரூ. 50 ஆயிரம், பட்டதாரி அல்லாத பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் திருமண நிதியுதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-

பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் திருமண உதவித் தொகை மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 2742 பயனாளிகளுக்கு ஒரு வாரத்திற்குள் தாலிக்கு தங்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மொத்தத் தொகை ரூபாய் 10 கோடியே 60 லட்சம் ஆகும்.

படித்த பெண்கள் வேலைக்கு செல்ல சிரம படக்கூடாது என்பதற்காக மானிய விலையில் ஸ்கூட்டி வழங்கப்படுகிறது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள். அரசு ஏராளமான திட்டங்களை வழங்கி வருகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கும் வகையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ மாணவர்களுக்கு படிப்பு செலவையும் அரசே ஏற்றுக் கொள்கிறது.

இவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.