தற்போதைய செய்திகள்

391 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் -அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்

திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் 391 மாணவ, மாணவிகளுக்கு ரூ.15.39 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தொகுதிக்குட்பட்ட, குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

இதில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு ராமச்சந்திரபுரம் மேல்நிலைப்பள்ளி, பெதப்பம்பட்டி மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம் மேல்நிலைப்பள்ளி மற்றும் பூளவாடி மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சார்ந்த 391 மாணவ, மாணவிகளுக்கு ரூ.15,39,863 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சி ஆல்கொண்டமால் திருக்கோவில் வளாகத்தில், 2021-ம் ஆண்டு நடைபெற்ற பொங்கல் திருவிழாவின் போது பக்தர்களால் வழங்கப்பட்ட உபய காணிக்கையாக வரப்பெற்ற 42 மாடுகள், 5 ஆடுகளை பராமரிப்பிற்காக மாற்றுத்திறனாளிகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து, உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், சின்னவீரம்பட்டி ஊராட்சி சேகர்புரத்தில், 14-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.11.01 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உதவித்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.9.32 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணியையும் அமைச்சர் துவக்கி வைத்தார்.