தற்போதைய செய்திகள்

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.60 கோடியில் கூடுதல் கட்டமைப்பு வசதி – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் ரூ.60 கோடியில் கூடுதல் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிஅறிவித்தார்.

சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:- 

1. கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் முதல் கட்டமாக கூடுதல் கட்டமைப்பு வசதிகள் 60 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.

2. கன்னியாகுமரி மாவட்டம், ஹெலன் நகர், ராஜாக்க மங்களம் மற்றும் கொட்டில்பாடு ஆகிய கிராமங்களில் 39.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.

3. திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் இயற்கை காரணங்களினால் மூடாதவாறு இருக்க, 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

4. தூத்துக்குடி மாவட்ட மீன்பிடி துறைமுகத்தின் படகு அணையும் தளத்தினை 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீட்டித்து, கூடுதல் படகுகள் நிறுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்படும்.

5. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு மற்றும் மண்டபம் தெற்கு கிராமங்களில் 20 கோடி ரூபாய் செலவில் மீன் இறங்கு தளங்கள் அமைக்கப்படும்.

6. கடலூர் மாவட்டம் அன்னன்கோயில் மற்றும் புதுக்குப்பம் கிராமங்களில் உள்ள மீன் இறங்குதளங்கள் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வசதிகள் ஏற்படுத்தி புனரமைக்கப்படும். மேலும், முடசலோடை கிராமத்தில் உள்ள மீன் இறங்குதளம் கூடுதல் படகுகள் நிறுத்துவதற்கு ஏதுவாக 9 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் நீட்டிக்கப்படும்.

7. காஞ்சிபுரம் மாவட்டம், புது குப்பம் மற்றும் உய்யாலி குப்பம் கிராமங்களில், 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளம் அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.