தற்போதைய செய்திகள்

43.44 லட்சம் விலையில்லா முகக்கவசம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை

கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை குரும்பபாளையம் நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 விலையில்லா மறுபயன்பாட்டு முகக்கவசங்களை கழக அமைப்புச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவிக்கையில்:-

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சரின் தலைமையிலான அரசு பல்வேறு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான், நோய் தொற்றிலிருந்து குணமடைந்து, இல்லம் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகமாகவும், உயிர் இழப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும் உள்ளது.

அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி, பொது இடங்கள் மற்றும் பணியிடங்களிலும், பிற இடங்களுக்கு பயணிக்கும் போதும் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 2.08 கோடி குடும்ப அட்டைதாரர்களின் 6.74 கோடி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் நியாய விலைக்கடைகளின் மூலம் வழங்கும் வகையில், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் 69.09 லட்சம் குடும்பங்களுக்கு 4.44 கோடி விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முகக் கவசங்கள் வழங்கும் திட்டத்தை கடந்த 27.07.2020 அன்று முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாநகராட்சி பகுதிகள், 3 நகராட்சிகள் மற்றும் 37 பேரூராட்சிகளில் உள்ள 7,19,813 குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இதற்காக கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு 43,44,126 முகக்கவசங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நியாய விலைக்கடைகளின் மூலமாக குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முகக் கவசங்கள் வழங்கு பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக மதுக்கரை வட்டம் குரும்பபாளையம் நியாய விலைக்கடையில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பணிக்காக வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, கொரோனா தொற்றிலிருந்து தங்களை காத்து, சமூகம் காக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

முன்னதாக, ரூ.2.67 கோடி மதிப்பீட்டில் மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டினார். 2 அடுக்கு கட்டிடமாக கட்டப்படவுள்ள இந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடமானது, தலா 13,375 சதுர அடி பரப்பளவில் கட்டப்படுகின்றது. கீழ் தளத்தில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் அறை, ஊராட்சி ஒன்றியக்குழு கூட்ட அரங்கு, வட்டார வளர்ச்சி அலுவலர் அறை, அலுவலக கட்டிடம், பதிவறை, மற்றும் இரு கழிப்பறைகளுடனும், மேல்தளத்தில் ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் அறை, பொது கூட்ட அரங்கு அமைக்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை எ.சண்முகம், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் பிரசன்னா இராமசாமி, மதுக்கரை பேரூராட்சி கழக செயலாளர் சண்முகராஜா, ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், ஒன்றிய பெருந்தலைவர் உதயகுமாரி பாலசண்முகம், கழக நிர்வாகிகள் ஜோசப், டாஸ்மாக் செந்தில், நிர்மல், இளங்கோ, அரசு வழக்கறிஞர் சசிகுமார், நவீன்குமார், ஜியாவுதீன், வயல்பாலு, தங்கதுரை, சதீஷ், காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.