தற்போதைய செய்திகள்

அனைத்து சமுதாய மக்களுக்கும் சகோதரனாக செயல்படுவேன்

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

விருதுநகர்

அனைத்து சமுதாய மக்களுக்கும் சகோதரனாக செயல்படுவேன் என்று தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டிராஜேந்திரபாலாஜி ராஜபாளையம் ஒன்றியத்தில் தளவாய்புரத்தில் செட்டியார்பட்டி, மேல வரகுணரமபுரம், அருள்புத்தூர், மீனாட்சிபுரம், முகவூர் காமராஜர் சிலை, முகவூர் கக்கன்காலனி, கோவிலூர், மேலூர் துரைச்சாமிபுரம், சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன்கோவில், சொக்கநாதன்புத்தூர்கீழூர் மாரியம்மன் கோவில், சோலைசேரி, கிருஷ்ணாபுரம் உட்பட பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா வழியில் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நல்லாட்சி மீண்டும் தொடர்ந்திட வாக்காள பெருமக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை மாபெரும் வெற்றிபெற செய்ய வைக்க வேண்டும்.

சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 10 ஆண்டுகளில் எல்லா சமுதாய மக்களின் நன்மதிப்பை பெற்று பணியாற்றி உள்ளேன். எந்த பிரச்சினையாக இருந்தாலும் என்னிடத்தில் கூறுவார்கள். நான் செய்து கொடுத்துள்ளேன்.

இதேபோன்றுதான் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியிலும் கடந்த 10ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். கட்சி பாகுபாடின்றி வளர்ச்சி திட்ட பணிகளை செய்து கொடுத்துள்ளேன்.

தனிப்பட்ட முறையிலும் ஏராளமான உதவிகள் செய்துள்ளேன். சமுதாய ரீதியாகவும் உதவி செய்துள்ளேன். நான் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுவேன் என்று எண்ணி பார்க்கவே இல்லை.

சிவகாசியிலேயே இரண்டு முறை வெற்றி பெற்று விட்டீர்கள். இந்த முறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இறைவன் சித்தாந்தம் நான் இங்கு போட்டியிடுகின்றேன்.

தற்போது உங்களிடத்தில் நான் வாக்கு கேட்டு வந்துள்ளேன். கக்கன் காலனி பகுதிக்கு பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். அதை கண்டிப்பாக நிறைவேற்றி கொடுப்பேன். ராஜபாளையம் சட்ட மன்றத்தில் வெற்றி பெற்று எல்லா சமுதாய மக்களுக்கும் அண்ணனாக தம்பியாக பாடுபடுவேன்.

அனைத்து சமுதாய மக்களும் அண்ணன் தம்பியாக இருக்கும் வகையில் பாலமாக நான் செயல்படுவேன். மூத்தவர்களுக்கு மகனாகவும் இளையவர்களுக்கு அண்ணனாகவும், சமநிலையில் இருப்பவர்களுக்கு நண்பனாகவும் இருந்து உங்கள் வீட்டுப் பிள்ளையாக தொகுதியின் பாதுகாவலனாக நான் என்றைக்கும் இருப்பேன். ஒன்றை மட்டும் நான் உறுதியாக கூறுகிறேன். நிச்சயமாக தவறு செய்தவர்களுக்கு உடந்தையாக இருக்க மாட்டேன்.

தவறான பாதையில் நான் செல்லவே மாட்டேன். மனசாட்சிக்கு விரோதமான எந்த செயலையும் நான் செய்ய மாட்டேன். இந்துவாக இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், முஸ்லிமாக இருந்தாலும் அனைத்து சமுதாய ஆன்மீக பணிகளுக்கு உறுதுணையாக இருப்பேன்.

இது ஒரு ஆன்மீக பூமி என்பதை நிரூபிக்கும் வகையில் என செயல்பாடு இருக்கும். வாக்காளர்கள் அத்தனை பேரும் வரும் சட்டமன்றத் தேர்தலில் எனக்கு இரட்டை இலை சின்னத்தில் ஒட்டுமொத்தமாக வாக்களித்து 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்.