மற்றவை

தி.மு.க ஊராட்சி தலைவியின் கணவர் மீது வழக்கு

சேலம்

மேட்டூர் அடுத்த பொட்டனேயில் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மரங்களை வெட்டிக்கடத்த முயன்றதாக தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த மேச்சேரியில் உள்ளது பொட்டனேரி ஊராட்சி ஒன்றியம், இங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்தின் பின்புறம் அரசு புறம்போக்கு நிலத்தில் 50 ஆண்டுகள் பழமையான பத்துக்கும் மேற்பட்ட வாகை மரங்கள் இருந்தன. இதிலிருந்து 7 வாகை மரங்களை தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவி ரம்யாவின் கணவர் பாஸ்கரன் (வயது 48) நேற்று முன்தினம் கூலியாட்களை வைத்து வெட்டி கடத்த முயன்று உள்ளார்.

இது தொடர்பாக வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் இதனை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அமுதா, மேச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் பாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.