குமாரபாளையம் பகுதிகளில் கனமழை 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது- பொதுமக்கள் கடும் பாதிப்பு

நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கோம்பு பள்ளத்தில் வழிந்து ஓடிய மழை வெள்ளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தேங்கியது. மேலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள ஓலப்பாளையம் ஏரி சுமார் 35 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி கிழக்குக்கரை கால்வாய் மூலம் நீர் நிரப்பப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
தற்போது ஏரி நிரம்பி இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக ஏரியல் இருந்து வெளியேறிய உபரி நீர் கோம்பு பள்ளத்தின் மூலம் வெளியேறியது.
கோம்புப்பள்ளம் நிரம்பி வெளியேறிய நீர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புகுந்தது. பள்ளி வளாகம் முழுவதும் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் குமாரபாளையம் பகுதிகளான கம்பன் நகர் பெரியார் நகர் பகுதியில் ஓலப்பாளையம் ஏரி நிரம்பி 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.