தற்போதைய செய்திகள்

6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

ஈரோடு

6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி, கோபிசெட்டிபாளையம் மற்றும் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவலூர், அயலூர், கலிங்கியம், அளுக்குளி, கோட்டுப்புள்ளாம்பாளையம், குருமந்தூர் ஆகிய 6 ஊராட்சி பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ரூ.61.30 கோடி மதிப்பீட்டில் 96 குடியிருப்புகளுக்கான புதிய கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்கு பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மக்களுக்கு ஒரு அரசு என்ன செய்ய வேண்டுமோ அந்த கடமையை தமிழ்நாடு அரசானது சீரோடும் சிறப்போடும் ஆற்றி வருகிறது. இப்பகுதி மக்களின் நலன் கருதி அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் நிரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதில் சேர்க்கப்படாத குளங்களையும் சேர்த்து, தண்ணீர் நிரப்புவதற்கும் 2-ம் கட்டமாக முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். 9ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதில் 98.5 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றார்கள். இன்றை சூழ்நிலையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கழக வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், கோபி மேற்கு ஒன்றிய செயலாளர் சிறுவலூர் எம்.மனோகரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் அருள்ராமச்சந்திரா, யூனியன் சேர்மன் கே.பி.மெளதீஸ்வரன், ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா, அருள், ராமச்சந்திரா சிறுவலூர் ஊராட்சி மன்றதலைவர் வனிதா வேலுச்சாமி, யூனியன் கவுன்சிலர் வேல்முருகன், முன்னாள் ஊராட்சி செயலாளர் அண்ணாதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.