ஈரோடு

726 பயனாளிகளுக்கு ரூ.5.33 கோடியில் தாலிக்குத் தங்கம்- திருமண நிதியுதவி

எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம்- கே.எஸ்.தென்னரசு வழங்கினர்

ஈரோடு

ஈரோட்டில் 726 பயனாளிகளுக்கு ரூ.5.33 கோடியில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் வழங்கினர்.

சமூக நலத்துறையின் சார்பில் ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 726 பயனாளிகளுக்கு ரூ 5.33 கோடி மதிப்பீட்டில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகள் மற்றும் வருவாய்த்துறையின் சார்பில் 100 பேருக்கு வீட்டு மனைபட்டாக்கள், 100 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் ஆகியவற்றை ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ., சட்டமன்ற அவைக்குழு தலைவர் கே.எஸ்.தென்னரசு எம்.எல்.ஏ. வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ஏழை, எளிய பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தினை, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தொடர்ந்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார் அதன்படி, பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், ஏழை, எளிய பெண்களுக்கான திருமண உதவி திட்டத்தின் கீழ் திருமாங்கல்யம் செய்ய 8 கிராம் தங்க நாணயத்துடன் பட்டதாரி அல்லாத பெண்களுக்கு ரூ.25,000 நிதியுதவியும், பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.484 கோடி மதிப்பில் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.82 கோடி மதிப்பில் ஈரோடு அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஈரோடு வ.உ.சி பூங்கா ரூ.6 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வறட்சியை எதிர்கொள்ளவும், நீர்வள ஆதாரங்களை பயனீட்டாளர்களின் பங்களிப்புடன் புனரமைக்க பண்டைய குடிமராமத்து திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கும் வகையில் குடிமராமத்து திட்டம் என்ற ஒரு சிறப்பான திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி செயல்படுத்தினார். அதன்படி, ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டதால் ஈரோடு மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 14 வகையான கல்வி உபகரணங்களை விலையில்லாமல் வழங்கினார். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 52,17,000 மடிகணினிகளும், 54,12,000 மிதிவண்டிகளும் வழங்கி தமிழ்நாடு அரசு சாதனை படைத்துள்ளது.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், பகுதி செயலாளர்கள் ஆர்.ஜெகதீசன், பி.கேசவமூர்த்தி, முருகு சேகர், கோவிந்தராஜன், ராமசாமி, ஒன்றிய செயலாளர் பூவேந்திரகுமார், அரசு வழக்கறிஞர் துரை சக்திவேல், ஏ.கே.பழனிசாமி, மீன் ராஜா, பட்டாசு மணி, மலர், ஜீவா ரவி, சூரியசேகர், கஸ்தூரி, பாப்பாத்திமணி, கார்த்திகேயன், பாலாஜி (எ) மோகன்குமார், ஜீவா அன்பழகன், மாவட்ட சமூக நலஅலுவலர் பூங்கோதை, கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.