சிறப்பு செய்திகள்

95,739 பயனாளிகளுக்கு ரூ.726.31 கோடியில் திருமண நிதியுதவி- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 4.2.2021 அன்று தலைமைச் செயலகத்தில், சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் திருமண நிதியுதவித் திட்டத்திற்காக 2020-2021-ம் நிதியாண்டிற்கு 95,739 பயனாளிகளுக்கு 726 கோடியே 31 லட்சம் ரூபாய் நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு தங்க நாணயங்கள் வழங்கும் விதமாக, 7 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு தங்க நாணயங்களை வழங்கி, துவக்கி வைத்தார்.

மேலும், மூன்றாம் பாலினர் தையற் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் 4 பேர்களுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கி, மூன்றாம் பாலினருக்கான பிரத்யேகமான கைபேசி செயலியை துவக்கி வைத்தார். அத்துடன் சமூக நலத்துறையில் 6 பேருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினையும் வழங்கினார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஏழைப் பெற்றோரின் மகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் விதவையர், ஏழை விதவையரின் மகள், கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர் ஆகியோர் பயன்பெறும் வகையில், ஐந்து வகையான திருமண நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் கீழ் பட்டதாரியல்லாதோருக்கு ரூ.25,000 நிதியுதவியும், பட்டம் / பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும் வழங்கப்படுகிறது.

மேற்படி நிதியுதவித் தொகையுடன், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் திருமாங்கல்யம் செய்வதற்கு தங்க நாணயம் வழங்கும் திட்டத்தை கடந்த 17.05.2011 முதல் துவக்கி வைத்து, 4 கிராம் (22 காரட்) தங்க நாணயம் வழங்கப்பட்டு வந்தது. பின்னர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 23.05.2016 அன்று திருமாங்கல்யம் செய்வதற்கு வழங்கப்பட்டு வரும் தங்க நாணயத்தை 8 கிராமாக உயர்த்தினார்.

மேற்கண்ட திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ், 2011-2012-ம் ஆண்டு முதல் 2019-2020-ம் நிதியாண்டு வரை, மொத்தம் 12,50,705 பயனாளிகளுக்கு 1,791 கோடியே 5 லட்சம் ரூபாய் செலவில் 6,099.08 கிலோ தங்கமாகவும், நிதியுதவியாக ரொக்கம் 4,371 கோடியே 22 லட்சம் ரூபாய், என மொத்தம் 6,162 கோடியே 27 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2020-2021-ம் நிதியாண்டிற்கு திருமண நிதியுதவித் திட்டத்திற்காக 95,739 பயனாளிகள் பயன்பெறும் வகையில் 726 கோடியே 31 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கிடும் விதமாக, முதலமைச்சர் 7 பயனாளிகளுக்கு தங்க நாணயங்களும் திருமண நிதியுதவி தொகையையும் வழங்கி, துவக்கி வைத்தார்.


சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் 2020-21-ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், மூன்றாம் பாலினரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் வகையிலும், மூன்றாம் பாலின உறுப்பினர்கள் கொண்ட தையற் கூட்டுறவுச் சங்கம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி,100 மூன்றாம் பாலினரைக் கொண்டு 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மூன்றாம் பாலினர் தையற் கூட்டுறவுச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் பாலினர் தையற் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் 4 பேர்களுக்கு முதலமைச்சர் விலையில்லா தையல் இயந்திரங்களை வழங்கினார்.

இதன்மூலம், மூன்றாம் பாலினருக்கு தையல் தொழில் பயிற்சி அளித்து பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் விலையில்லா சீருடை திட்டத்தின் கீழ் சீருடை தைத்து வழங்கும் பணியினை மற்ற தையல் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவது போன்று மூன்றாம் பாலினருக்கும் வழங்கி அவர்களும் நிரந்தர வருமானம் பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் 2019-2020-ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், மூன்றாம் பாலினர், அரசின் நலத் திட்டங்களை பயன்படுத்தி சமூக-பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் 10 லட்சம் ரூபாய் செலவில் கைபேசி செயலி ஒன்று உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, மூன்றாம் பாலினர் தங்களது தனிப்பட்ட விவரங்களை பிறர் அறிந்திடாத வண்ணம் தாமாகவே முன்வந்து பதிவு செய்வதற்கேதுவாக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேகமான கைபேசி செயலியை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.

2018-2019 மற்றும் 2019-2020-ம் ஆண்டுகளில் சமூக நலத் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு 8 நபர்களும், தட்டச்சர் பணியிடங்களுக்கு 37 நபர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், சமூக நலத்துறையில் பணியாற்றி பணியிடையே இறந்த ஊழியர்களின்26 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கிட தகுதி பெற்றுள்ளனர். இந்த 71 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் 4 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை செயலாளர் எஸ்.மதுமதி, சமூகநல ஆணையர் த.ஆபிரகாம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.