தமிழகம் தற்போதைய செய்திகள்

கழகம் ஆட்சிக்கட்டிலில் அமர ஒற்றை தலைமை அவசியம்- கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் அறிக்கை

சென்னை,

இந்த இயக்கம் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்றால் ஒற்றை தலைமை அவசியம். அது இப்போதே நடந்தேற வேண்டிய கட்டாயம் என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் கூறி உள்ளார்.

கழக செய்தி தொடர்பாளரும், கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளரும், கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினருமான ஆர்.எம்.பாபு முருகவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல நேரங்களில் தி.மு.க.வை எதிர்த்தும், தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன அறிக்கைகளில் வெளியிட வேண்டும் என்று அறிக்கையை தயார் செய்து தங்களின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தால் அறிக்கை மிகவும் மென்மையாக இருக்க வேண்டும் என்றும், கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கக்கூடாது என்றும் பல திருத்தங்களை செய்து அனுப்புவீர்கள்.

மாறாக எடப்பாடியார் அறிக்கை நன்றாக இருக்கிறது என்று சொல்லி உடனடியாக ஒப்புதல் அளிப்பார். அறிக்கை என்பது குறிப்பாக கண்டன அறிக்கை என்பது காட்டமான செயல்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மாறாக கேட்டுக்கொள்கிறோம்.

வேண்டுகிறோம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இருந்தால் அது கண்டன அறிக்கையாக இருப்பதற்கு உண்டான சாத்தியக்கூறுகள் இல்லை. இதிலேயும் எடப்பாடியார் தான் வலிமையாக, கடுமையாக களம் ஆடுவதற்கு உண்டான தலைமையாக நான் பார்க்கிறேன்.

பல செய்தி, ஊடக செய்தியாளர் சந்திப்பில் தொடரந்து முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருக்கக்கூடிய பன்னீர்செல்வம் ஒருபுறம், மாறாக ஒற்றைத்தலைமை தான் வேண்டும். அதுவும் இன்னார் தான் வேண்டும் என்று இதுவரை வாய் திறக்காத ஒரே நபர் கழகத்தில் எடப்பாடியார் மட்டுமே.

இந்த ஒரே நிகழ்விலிருந்து யார் இந்த இயக்கத்தை காப்பாற்றுவதற்கும், இந்த தொண்டர்களை அரவணைத்து செல்வதற்கும், மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவதற்கும் தகுதியான நபர் என்பதை உங்களுடைய முடிவுக்கு விட்டு விடுகிறோம்.

பல நேரங்களில் இந்த இயக்கத்திற்கு தன்னால் எந்தவித கரும்புள்ளியும் வந்து விடக்கூடாது என்று நீங்கள் அடிக்கடி சொல்வது உண்மையானால் மிகப்பெரிய கறை இந்த இயக்கத்திற்கு ஏற்படுத்துவதற்கு நீங்கள் காரணமாக அமைந்து விடக்கூடாது மீண்டும் நம்முடைய வெற்றி சின்னமாம் இரட்டை இலை முடக்கப்படுவதற்கு உண்டான காரணம் நீங்களாக அமைந்து விடக்கூடாது இந்த இயக்கம் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்றால் ஒற்றை தலைமை அவசியம். அது இப்போதே நடந்தேற வேண்டிய கட்டாயம் அதை புரிந்து கொண்டு உங்களுடைய செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக செய்தி தொடர்பாளர் ஆர்.எம்.பாபு முருகவேல் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.