தற்போதைய செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடையாது – அமைச்சர் ஆர்.காமராஜ் உறுதி

திருவாரூர்

டெல்டா மாவட்டங்களில் எண்ணெய் கிணறுகள் அமைப்பது போன்ற எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்த அனுமதி கிடையாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.6.5 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக கட்டடத்தின் கட்டுமான பணிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி வருமாறு:-

இந்த ஆண்டிற்கான காரிப் பருவத்தில் இதுவரை 31 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது முற்பட்ட குருவைக்கான நெல் கொள்முதல் நடைபெறுவதற்காக தமிழகம் முழுவதும் 551 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

நீட் தேர்வை பொறுத்தவரை மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முடிவே தற்போதைய அரசின் முடிவாகும். தமிழகத்திற்கு நீட் தேர்வு தேவையில்லை என்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. தற்பொழுது நீட் தேர்வு எழுத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். தற்கொலை போன்ற முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே எங்களுடைய அன்பான வேண்டுகோள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.

ஓ.என்.ஜி.சி சார்பாக புதிதாக எண்ணெய் குழாய்கள் அமைக்கப்பட உள்ளதே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி. மற்ற எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்த அனுமதி கிடையாது என்று அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனந்த், கூடுதல் ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.