சிறப்பு செய்திகள்

விதியின் கொடுமை ஸ்டாலின் முதலமைச்சராக வந்து விட்டார்-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை

சென்னை

விதியின் கொடுமை ஸ்டாலின் முதலமைச்சராக வந்து விட்டார். மக்கனின் கண்ட கனவுகள் அனைத்தும் கானல் நீராக போய் விட்டது என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனையுடன் கூறி உள்ளார்.

கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூர் மாவட்டம் அவினாசிக்கு நேற்று வருகை தந்தார். அப்போது அங்கு அவரை வரவேற்க பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

பல்வேறு தடைகளை தாண்டி, உங்களின் துணையோடு, நிர்வாகிகளின் துணையோடு, ஒரு விவசாயி இன்றைக்கு கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி கிடைக்கப்பெற்றது விவசாயிகளுக்கு கிடைத்த பெருமையாக நான் எண்ணுகிறேன்.

ஏற்கனவே உங்களால் ஒரு விவசாயி தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற காரணத்தினால் தான் நீங்கள் பல ஆண்டுகள் போராடி வந்த, வறட்சியான பகுதி இந்த பகுதியில் உள்ள நிலங்கள் எல்லாம் பசுமையாக மாற வேண்டும் என்று அதற்கு அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நீங்கள் குரல் கொடுத்து கொண்டிருந்தீர்கள்.

அம்மா அவர்கள் இருக்கும்போதே கோரிக்கை வைத்தீர்கள். துரதிர்ஷ்டவசமாக அம்மா மறைந்தாலும் அம்மாவிடம் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அம்மாவின் அரசு அதனை கவனமாக பரிசீலனை செய்து ரூ.1652 கோடியில் அந்த திட்டத்தை நானே நேரில் வந்து அடிக்கல் நாட்டிவிட்டு சென்றேன்.

இன்றைக்கு அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் வறண்ட ஏரிகள் எல்லாம் நிரம்பியிருக்கும். இன்றைக்கு பவானிசாகர் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் அனைத்தும் கடலில் சென்று வீணாக கலந்து விடும் காட்சியை நாம் பார்த்து வருகிறோம்.

இந்த விடியா தி.மு.க அரசு, திறமையற்ற ஸ்டாலின் அரசு நிர்வாக கோளாறின் காரணமாகவும், நாம் கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக இந்த திட்டத்தை துரிதப்படுத்தாமல், வேகப்படுத்தாமல், மெத்தனமாக நடைபெற்று வருகிறது. இன்னும் முழுமை பெறாமல் இருக்கிறது.

2021 டிசம்பரில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் நிறைவேற்றப்பட்டு திறப்பதாக நாங்கள் முடிவு செய்திருந்தோம். இன்றைக்கு அந்த டிசம்பர் மாதம் சென்று 2022ம் வருடம் டிசம்பர் மாதம் வந்தாலும் கூட இந்த திட்டத்தை நிறைவேற்றுவார்களா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

அந்த அளவுக்கு துரிதமாக செயல்படுகின்ற அரசு ஸ்டாலின் அரசு. ஆமை வேகத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எவ்வளவு நீர் வீணாக சென்று கடலில் கலக்கிறது என்பதை எண்ணி பார்க்க வேண்டும். ஒரு சொட்டு நீர் கூட வீணாகக்கூடாது என்பதற்காக தான் குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து குளம், குட்டை அனைத்தையும் தூர் வாரினோம்.

தூர் வாரும் மண்ணை விவசாயிகள் விலையில்லாமல் அவர்களின் நிலத்திற்கு இயற்கை உரமாக பயன்படுத்தினார்கள். ஒரு லோடு மண் அள்ளினால் அதற்கு ஆயிரம் ரூபாய். அதற்கு வாடகை தனி. இன்றைக்கு ஒரு லோடு மண்ணை அள்ள ஆயிரம் ரூபாய் கமிஷன் அளித்தால் தான் அதனை அள்ள முடியும்.

விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் அளித்த அரசு அம்மாவின் அரசு. விவசாயிகள் என்னனென்ன பிரச்சினைகளை சந்திக்கிறார்கள் என்பதை உணர்ந்து அதனை எல்லாம் கண்ணை இமை காப்பது போல விவசாயிகளை காத்த அரசு அம்மாவின் அரசு.

ஆனால் அனைத்தும் இன்றைக்கு தலைகீழாக மாறி விட்டது. விதியின் கொடுமையின் காரணமாக இன்றைக்கு முதல்வராக ஸ்டாலின் வந்தார். இந்த மக்கள் என்னவெல்லாம் எதிர் பார்த்தார்கள். 10 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்து இருக்கிறார்கள். தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று கனவு கண்டார்கள். அந்த கனவு அனைத்தும் கானல் நீராக போய் விட்டது. அவர்கள் அளித்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.