தமிழகம்

சமூக இடைவெளியை கடைபிடித்து ஆகஸ்ட் 15ல் சுதந்திர தினவிழா – முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை:-

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் நடைமுறை தொடரும் என்றும் ஆகஸ்ட் 15-ம்தேதி சமூக இடைவெளியை கடைபிடித்து சுதந்திர தினவிழா கொண்டாடப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதி தவிர, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட பகுதிகளிலும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் (Except Containment Zones), ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்க்காணும் பணிகளுக்கு 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:

1) அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் (Standing Operating Procedure) பின்பற்றி, ஏற்கனவே ஊராட்சிப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோவில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோவில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர்களின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும். பெரிய வழிபாட்டுத்தலங்கள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொது மக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட மாட்டாது.

• குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும்.

• தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment Zones) தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.

• அனைத்து, தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் / பணியாளர்களை வீட்டிலிருந்தபடி பணிபுரிய ஊக்குவிப்பதோடு, தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

• ரயில் மற்றும் விமான போக்குவரத்தைப் பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும்.

• ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் / சென்னை மாநகராட்சி ஆணையரிடம் முறைப்படி இ-பாஸ் பெற வேண்டும்.

• தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம்தேதி, மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, சமூக இடைவெளி, முககவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடித்து சுதந்திர தின விழா கொண்டாடப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.