தமிழகம் தற்போதைய செய்திகள்

ஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிட 5 குழுக்கள் – தமிழக அரசு உத்தரவு

சென்னை

ஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிடும் வகையில் கிராம அளவில் 5 ஊராட்சி குழுக்களை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு ( புதியதாக மாற்றி அமைக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி அனுப்பியுள்ள கடித்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் முடிவுற்று,புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவியேற்றுள்ளனர். மூன்றடுக்கு ஊராட்சி அமைப்புகளுள் மிக முக்கியமான அமைப்பான ஊரகப் பகுதி மக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ள கிராம ஊராட்சி நிர்வாகம் அதிக அளவிலான பணிகளைக் கொண்டுள்ளதன் காரணமாக, அப்பணிகளை திறம்பட செயல்படுத்துவதற்கு ஏதுவாகவும், அதன் அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படை தன்மை நிலவ வேண்டும் என்ற நோக்கத்துடனும், கிராம ஊராட்சி நிர்வாகத்திற்கு உதவிடும் வகையில் கிராம ஊராட்சி அளவில் நியமனக்குழு, வளர்ச்சிக்குழு, வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மைக்குழு, பணிகள் குழு, கல்விக்குழு போன்ற குழுக்களை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்களில் இடம் பெறலாம். குழுவின் எந்தவொரு உறுப்பினரும் மூன்றுக்கு மேற்பட்ட குழுக்களில் தலைவராக இருக்க முடியாது. கிராம ஊராட்சித் தலைவர் மேற்குறிப்பிட்ட அனைத்து குழுக்களிலும் பதவி வழி உறுப்பினராக இருப்பார்.

நியமனக்குழுவில் கிராம ஊராட்சித் தலைவர் மற்றும் இரண்டு ஊராட்சி உறுப்பினர்கள் மட்டுமே இருக்கவேண்டும். வளர்ச்சிக் குழுவில் 9 உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர்.இக்குழுவின் தலைவராக தொடர்புடைய ஊராட்சியின் பெண் வார்டு உறுப்பினர்களுள் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மைக்குழுவில் 7 உறுப்பினர்கள் இருக்கவேண்டும்.

பணிகள் குழுவில் 9 உறுப்பினர்கள் இருக்கவேண்டும்.கல்விக்குழுவில் 5 பேர் இடபெறவேண்டும்.நியமனக் குழு தவிர மற்ற குழுக்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கூட்டப்படவேண்டும்.கிராம ஊராட்சிக்கு ஏதாவது பணியிடம் தேர்வு செய்யும்போது நியமனக் குழுக் கூட்டம் கூட்டப்படவேண்டும்.

மேற்கண்ட வழிமுறையை பின்பற்றி தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சி குழுக்கள் அமைப்பது தொடர்பான அறிவுரைகளை சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.