சிறப்பு செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை – அமைச்சர்கள்,அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து திரும்புவோர் அனைவருக்கும் விமான நிலையங்களில் கொரோனா அறிகுறி இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யப்படுகிறது. கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து திரும்புவோர் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள். அறிகுறி இருப்பவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தனிவார்டுகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், டாக்டர் வி.சரோஜா, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டத்தில், விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மாநிலம் முழுவதும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அனைத்துத்துறை அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் ஒன்றிணைந்து பணியாற்றி, கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.

இதனை தொடர்ந்து தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது தொடர்பாக, எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சருடன் விரிவான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேவையான அறிவுரைகளை முதலமைச்சர் வழங்கினார். அனைத்து துறைகளின் அமைச்சர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் பேருந்து நிலையம், ரயில் நிலையம், துறைமுகம் போன்ற இடங்களில் கண்காணித்து வருகிறோம்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட இருக்கிறது. பள்ளிகள், தொழில் வளாகங்கள், திரையரங்கம், விமான நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், துறை சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை, கோவை, திருச்சி ஆகிய மாவட்ட புறநகர் பகுதிகளில் தனிமை சிகிச்சைப் பிரிவு அமைக்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ரயில் நிலையங்களில் தூய்மையைக் கடைபிடிக்க வேண்டும். சென்னை கிண்டியில் உள்ளது போன்று கொரோனா வைரசுக்கான பரிசோதனை நிலையம் தேனியில் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 இடங்களில் கொரோனா வைரசுக்கான பரிசோதனை நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

அவருக்கு தற்போது ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மனைவிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அவருடன் பயணித்த நபர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரசுக்கு சரியான மருந்து, இதுவரை கண்டறியப்படவில்லை. நோய் அறிகுறிகளுக்கேற்ப மருந்துகள் அளித்து, மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. இதை நாம் வரவேற்க வேண்டும். மாறாக, குறை ஏதும் கூறக்கூடாது.

கொரோனா வைரஸ் தொடர்பாக தவறான செய்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். தேவையில்லாத பயம் வேண்டாம். வீண் வதந்திகளை பொது மக்கள் நம்ப வேண்டாம் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு தேவையான பாதுகாப்பு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நோய் தாக்குதல் அறிகுறிகள், சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் சோர்வடையாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச விமான நிலையத்தில் தினமும் சுமார் 8,500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் நபர்களுக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை கண்டறிவது மிகவும் சவாலான விஷயமாகும். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களே முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

அதேபோன்று மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரும் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும். அனைவரும் முக கவசம் (மாஸ்க்) அணிய வேண்டும் என்ற நிலை தற்போது தமிழகத்தில் இல்லை. சுகாதாரத்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களும், சிகிச்சைக்கான மருந்துகளும் தேவையான அளவு கையிருப்பில் உள்ளன.

அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், அந்தந்த மாவட்ட பள்ளிகள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 1 லட்சத்து 22 ஆயிரத்து 318 பேரை பரிசோதனை (ஸ்கிரீனிங்) செய்துள்ளோம். சீனா, தென்கொரியா, இத்தாலி, ஜப்பான் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த நாடுகளுக்கு செல்பவர்களின் விசாவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் யாரேனும் ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் இருந்தால், அவர்களை தங்களது சொந்த நாடுகளுக்கு செல்லுமாறு ஓட்டல் நிர்வாகங்கள் அறிவுறுத்த வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அனைத்து துறையினருக்கும் தெளிவான உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 1088 பேர் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். பொதுமக்கள் வெறும் சோப்பினால் கை கழுவினாலே போதுமானது. வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசும், வெளியுறவுத்துறையும் எடுத்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.