ஒத்து வந்தால் வாருங்கள், இல்லையேல் ஒதுங்கி விடுங்கள்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் எச்சரிக்கை
விழுப்புரம்
கழகத்தினர் அனைவரும் எடப்பாடியாருக்கு ஆதரவாக ஒன்று திரண்டு நிற்கிறோம்.தேவையில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்துவதை நிறுத்தி விடுங்கள், ஒத்து வந்தால் வாருங்கள். இல்லையேல் ஒதுங்கி விடுங்கள் என்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு எச்சரித்து உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் மனதிலும் சரி, ஒன்றரை கோடி தொண்டர்கள் மத்தியிலும் இடம் பிடித்து எம்ஜிஆர் போலவும், எங்கள் தாய் புரட்சித்தலைவி அம்மா போலவும் இருபெரும் தலைவர்கள் போலவும் மக்கள் மனதில் நின்று அவர் செய்த சாதனைகள் எல்லாம் நான்கரை ஆண்டு காலம் செய்த திட்டங்கள் எல்லாம் மக்கள் மனதில் வைத்துக்கொண்டு மீண்டும் எடப்பாடியார் ஆட்சி வர வேண்டும், விடியா தி.மு.க. ஆட்சி போக வேண்டும் என்று ஓராண்டு காலமாகவே மக்கள் பேசி கொண்டிருக்கிறார்கள்.
இந்த வேளையில் ஓ.பன்னீர்செல்வம் தயவு கூர்ந்து ஒன்றரை கோடி தொண்டரை குழப்பாமல் இயக்கத்தை முடக்காமல் கழகத்தின் மீது பற்று இருந்தால் நீங்கள் ஒதுங்கியிருந்து அம்மாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்றால் கட்சி சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைவதற்கும் கட்சி செயல்படுவதற்கும் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இருந்தால் உங்களுக்கும் நல்லது. உங்கள் வாரிசுக்கும் நல்லது. ஒத்து வந்தால் வாருங்கள். இல்லையென்றால் ஒதுங்கிக்கொள்ளுங்கள்
உங்கள் மகன் ஸ்டாலினிடம் சென்று தி.மு.க ஆட்சியை நல்லாட்சி என்று சொல்கிறார். இதற்கு துரைமுருகன் நக்கலாக பேசுகிறார். இதுபோன்ற செயல்களை ஒன்றரை தொண்டர்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். ஆக தயவு கூர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அவரோடு இருக்கின்ற நான்கு மாவட்ட செயலாளர்களும் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.
4665 பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்களில் கிட்டத்தட்ட 4500 பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் இப்பொழுது எடப்பாடியார் தலைமையில் இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கிற ஒட்டுமொத்த நிர்வாகிகளும் எடப்பாடியார் பின்னால் இருக்கிறார்கள்.
மூன்று பேர் தவிர அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எடப்பாடி பின்னால் இருக்கிறார்கள். ஆக ஒட்டுமொத்தமாக இவர் பின்னால் இருக்கிறபோது, ஓ.பன்னீர்செல்வம் தேவையில்லாமல் இந்த மக்களையும், தொண்டனையும் குழப்புவதற்கு அளிக்கின்ற பேட்டிகளை நிறுத்திவிட்டு,
வழக்காடு மன்றத்திற்கு செல்லாமல் மீண்டும் வருகின்ற 11ம்தேதி நடக்கின்ற கழக பொதுக்குழு செயற்குழுவிற்கு இடையூறு இல்லாமல் இருந்தால் உங்களுக்கு நல்லது என்பதை சொல்லிக்கொள்கிறேன்.
கள்ளக்குறிச்சி மாவட்ட கழகத்தில் இருக்கிற 49 செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களும் அனைத்து கழக நிர்வாகிகளும் எடப்பாடியார் ஆதரவாக ஒன்று திரண்டு நிற்கிறோம். எந்த சக்திகள் வந்தாலும் எங்களை பிரிக்க முடியாது.
இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் இரா.குமரகுரு கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் அமைச்சர் மோகன், கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.