தற்போதைய செய்திகள்

சசிகலாவின் பித்தலாட்ட வேலைகள் கழக தொண்டர்களிடம் பலிக்காது – தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி உறுதி

சென்னை

சசிகலாவின் பித்தலாட்ட வேலைகள் கழக தொண்டர்களிடம் பலிக்காது என்று தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி கூறினார்.

தென்சென்னை தெற்கு (மேற்கு) மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விருகம்பாக்கத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான விருகை வி.என்.ரவி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி பேசிதாவது:-

கடந்த நான்கு ஆண்டுகளாக அம்மா அவர்களின் வழியில் முன்னாள் முதலமைச்சரும், கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் முதலமைச்சரும், கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மிகவும் சிறப்பாக கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வந்தனர்.

கழகத்தை அழிக்க கங்கனம் கட்டிக் கொண்டு இருக்கும் சசிகலா. டி.டி.வி.தினகரன் ஆகியோர் கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி தொண்டர்களை திசை திருப்பும் பல்வேறு செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அவர்களின் பித்தலாட்ட வேலைகள் ஒருபோதும் கழக தொண்டர்களிடம் பலிக்காது. ஏமாற்றம் அடையப் போவது சசிகலா தான். ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட கழகம் புரட்சித்தலைவர் உருவாக்கி இதயதெய்வம் புரட்சிதலைவி அம்மா அவர்களால் வளர்க்கபட்ட தூய்மையான இயக்கம்.

சசிகலா, டி.டி.வி.தினகரன் போன்ற தீயவர்களால் கழகத்தை ஏதும் செய்ய முடியாது. வரும் உள்ளாட்சித்தேர்தலில் கழகம் மீண்டும் எழுச்சி பெற்று மாபெரும் வெற்றியை பெறும். தொண்டர்கள் நாம் துவண்டு விடாமல் எப்போதும் உற்சாகத்துடன் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

இவ்வாறு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி பேசினார்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

கழகத்தில் குழப்பம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சசிகலாவுடன் யாரும் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது. அவ்வாறு தொடர்பு வைத்து கொண்டால் அவர்கள் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட கனவையும், எனக்கு பின்னால் நூறாண்டுகள் ஆனாலும், கழகம் மக்கள் தொண்டில் முன்னணியில் நின்று பணியாற்றும் என்ற புரட்சிதலைவி அம்மா அவர்களின் லட்சியத்தையும் ஒருங்கிணைந்து நிறைவேற்றுவோம்.

மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் கொரோனா காலத்தில், மதுக்கடைகளை திறக்க அனுமதித்த மக்கள் நலனில் அக்கறை இல்லாத தி.மு.க அரசுக்கு வருகின்ற நாடாளுமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

முன்னாள் முதலமைச்சரும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, முன்னாள் முதலமைச்சரும் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையை ஏற்று தடம் புரளாமல் அவர்கள் வழியில் கழகம் என்ற பேரியக்கத்தை ஒற்றுமையுடன் கண் இமைபோல் காப்போம்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.