தற்போதைய செய்திகள்

தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ரூ.1 கோடி- முதலமைச்சரிடம், அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார்

சென்னை

கொரோனா தடுப்பு பணிகளுக்கு தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் ரூ.1 கோடியை முதலமைச்சரிடம்,அமைச்சர் டி.ஜெயக்குமார் வழங்கினார்.

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழகம் தனது நிறுவன சமுதாய பங்களிப்பு திட்டத்தின்கீழ் லாபத்தில் ஒரு பகுதியை வருடந்தோறும் மீனவர் மற்றும் மீனவர் நல திட்டங்களுக்காக செலவு செய்து வருகிறது. இதுதவிர முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கணிசமாக தனது பங்களிப்பை அளித்து வருகிறது. 2012- 2013ம் ஆண்டு முதல் தனது நிகர லாபத்தில் 30 சதவீதத்தை பங்கு தொகையாக மாநில அரசுக்கு வழங்கி வருகிறது.

2019 -20ம் ஆண்டில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் உத்தேசமாக ரூ.8 கோடி நிகர லாபமாக ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு சீரிய பணிகளுக்கு, பங்களிக்கும் விதமாக இடைக்கால பங்கு தொகையாக ரூ.1 கோடிக்கான காசோலையை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அரசு முதன்மை செயலாளர் டாக்டர் கோபால், மீன்வளத்துறை இயக்குனர் மற்றும் மேலாண் இயக்குனர் டாக்டர் வி.எஸ்.சமீரன் ஆகியோர் இருந்தனர்.