தற்போதைய செய்திகள்

90 வயது முதியவர்களை கூட காப்பாற்றியிருக்கிறோம் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேட்டி

காஞ்சிபுரம்

கொரோனாவை கண்டு யாரும் அச்சப்பட தேவையில்லை. 90 வயது முதியவர்களை கூட காப்பாற்றியிருக்கிறோம் என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானிடோரியம் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று வகைப்படுத்துதல் மையத்தை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பார்வையிட்டார். அப்போது அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் எ.ஜான்லூயிஸ் மற்றும் மருத்துவக்குழுவினர் இருந்தனர்.

அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் போர்க்கால அடிப்படையில் துரிதமாக எடுத்து வருகின்றது. அனைத்து மாவட்டங்களிலும் படுக்கை வசதிகளை அதிகரித்து வருகின்றோம். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகரித்து வருகின்றோம். செங்கல்பட்டு மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனை களையும் சேர்த்து கிட்டத்தட்ட 2827 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தாம்பரம் அருகில் உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு செல்லாமல் தாம்பரத்திலே சிகிச்சை அளிப்பதற்காக 500 படுக்கை வசதிகள் கொண்ட மையம் இங்கு ஏற்படுத்தப்பட்டதோடு அவர்களை குணப்படுத்துவதற்கான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.

முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி பரிசோதனைகள் அதிக அளவில் நடத்தப்படுகின்றது. வளர்ந்த நாடுகள் கூட கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு படுக்கை வசதி அளிக்க முடியாத சூழ்நிலை உருவானதை நாம் அறிந்தோம். ஆனால் தமிழ்நாட்டில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கப்பட்டு நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

கொரோனா தொற்று ஏற்பட்டவரை யாரும் எதிரியாக பார்க்க வேண்டாம். நம்முடைய எதிரி கொரோனா வைரஸ்தான். வைரஸ் தொற்று ஏற்பட்ட 52,920 பேரை தமிழக அரசு காப்பாற்றியுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு மரணம் என்ற தவறான அச்சத்தை தவிர்க்க வேண்டும். யாரும் பயப்பட வேண்டாம். நல்ல உணவு, நல்ல தூக்கம், நல்ல மனநிலை, அரசு கூறும் வழிமுறைகள் இவையாவும் ஒரு நோயாளியை குணப்படுத்தக் கூடியதாகும்.

இன்னும் சொல்லப்போனால் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 90 வயதுடைய முதியோர்கள், புற்று நோயாளிகள், கடும் நோயால் பாதிக்கப்பட்டவர் என 160க்கும் மேற்பட்டோர் மற்றும் பிறந்த குழந்தை இவர்களையெல்லாம் அரசு காப்பாற்றி உள்ளது. எனவே யாரும் அச்சப்பட வேண்டாம். அனைத்து உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.