தற்போதைய செய்திகள்

ரூ.19 லட்சத்து 84 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் – அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.19 லட்சத்து 84 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் தலைமை வகித்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்ததாவது:-

மாற்றுத்திறனாளிகளின்; வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் தன்னம்பிக்கையை வளரச்செய்து சமுதாயத்தில் சம வாய்ப்புகளை ஏற்படுத்தி தர, புரட்சித்தலைவி அம்மாவின் அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண அட்டை, மடக்கு சக்கர நாற்காலி, இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், நவீன காதொலி கருவி, செயற்கை கால், செயற்கை கை ஆகியவைகளை புரட்சித்தலைவி அம்மாவின் அரசு விலையில்லாமல் வழங்கி வருகிறது. மேலும், மாற்றுத்திறனாளி களுக்கான பராமரிப்பு உதவி தொகையும், மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் தொடங்குவதற்கு கடனுதவியும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இன்றைய தினம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 35 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.19 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், மூன்று மாற்றுத்திறனாளிகளின் தாய்மார்களுக்கு ரூ.10 ஆயிரத்து 800 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரமும் ஆக மொத்தம் ரூ.19 லட்சத்து 84 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்களால் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து தமிழக அரசால் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், வருவாய் கோட்டாட்சியர் செல்வி.ஜெயபிரீத்தா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.