தற்போதைய செய்திகள்

கொரோனாவால் ஒரு உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்று அதிக கவனம் செலுத்தி வருகிறோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை

கொரோனாவால் ஒரு உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்று அதிக கவனம் செலுத்தி வருகிறோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சென்னையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பாதிப்பு தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஊரடங்கு காலத்தில் திருமண மண்டபங்கள் மூடியிருந்தாலும் திருமணங்கள் நடைபெற்று தான் வருகிறது. கொரோனா தொற்று நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் இதயநோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சவாலாக இருக்கிறது ஒரு உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்று அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

இ-பாஸ் முறை ரத்து செய்வது தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம், முதலமைச்சர் இதுகுறித்து களஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் முதலமைச்சர் அறிவிப்பை வெளியிடுவார்.

இரண்டாம் தலைநகரம் தொடர்பாக பொது மக்களின் கோரிக்கைகளை ஏற்று, தென் மாநில மக்கள் நலனுக்காக மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆய்வு செய்து தக்க முடிவு எடுப்பார். மக்களின் வளர்ச்சிக்காக வைக்கும் எந்த கோரிக்கையையும் தவறு இல்லை. உரிய நேரத்தில் முதலமைச்சர் துணை முதலமைச்சர் முடிவெடுப்பார்கள்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து பட்டியலின ஊராட்சி மன்ற தலைவருக்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்த கேள்விக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.