தற்போதைய செய்திகள்

நீர்நிலைகளை பாதுகாக்க மரங்களை வளர்ப்போம் – அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள்

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத் நீர்நிலைகளை பாதுகாக்க மரங்களை வளர்ப்போம் என்று கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் பனை மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ் கடலூர் மத்திய மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் பாதிரிக்குப்பம் திரவுபதி அம்மன் கோயில் குளக்கரையில் பனை மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் கெமிக்கல் ஆர்.மாதவன் தலைமை தாங்கினார். கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராம.பழனிசாமி, கடலூர் நகர கழக செயலாளர் ஆர்.குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும், தொழில் துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் கலந்து கொண்டு பனை மரக்கன்றுகளை நட்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

பனை மரக் கன்றுகள் வளர்ந்தால் நீர்நிலைகளில் நீர்மட்டம் பாதுகாக்கப்படும். ஆற்றின், குளத்தின், ஏரிகளின் கரைகள் பலப்படும். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் உபயோகமான பொருட்கள் ஆகும். பனைமரத்தில் இல்லாத மகத்துவமே இல்லை. இன்னும் 10 ஆண்டுகளில் கடலூர் மாவட்டம் பனை மரம் நிறைந்த பகுதியாக இருக்கும். எனவே இங்கு நடப்பட்டுள்ள பனை மரக்கன்றுகள் அனைத்தையும் வளர்ப்போம் என்று இந்த கிராம மக்கள் உறுதி எடுத்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

நிகழ்ச்சியில் கழக மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல் ஜி.ஜே.குமார், மாவட்ட மீனவர் அணி செயலாளர் கே.என். தங்கமணி, மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் ஆர்.வி.ஆறுமுகம், நகர துணை செயலாளர் வ. கந்தன், ஒன்றிய கவுன்சிலர்கள் எம்.கே.வேல்முருகன், மகேஸ்வரி விஜயராயலு, கிரிஜா செந்தில்குமார், கூத்தப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ஜல்லி சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.கே.எஸ்.சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.