தற்போதைய செய்திகள்

பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி,நிதியை ஒதுக்கீடு செய்த முதலமைச்சருக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நன்றி

மதுரை

மதுரை மாநகரை எழில்மிகு நகரமாக உருவாக்க பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிதியை ஒதுக்கீடு செய்த முதலமைச்சருக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நன்றி தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தில் முதலமைச்சர் கொரானா நோய் தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் சிறப்புரையாற்றி, அதன்பின் மதுரை மாவட்டத்தில் 21.77 கோடி மதிப்பில் முடிக்கப்பட்டுள்ள திட்டங்களை திறந்து வைத்தும், அதன்பின் 304.55கோடி மதிப்பில் பல்வேறு புதிய திட்டங்களுக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இதில் குறிப்பாக நான்கு மாசி வீதிகளில் சிறப்பு சாலை அமைக்கவும் சீரான குடிநீர் வழங்கவும் 53.62 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், மதுரையில் பல்லடுக்கு வாகனம் நிறுத்தம் அமைக்க 41.96 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், வைகை ஆற்றினை மேம்படுத்த ரூ.84 கோடியும், தமுக்கம் மைதானத்தில் கலாசார மையம் அமைக்க 47.7 கோடி ரூபாயும், பாதாள சாக்கடை ஏற்படுத்துவதற்கு 275 கோடியும், திடக்கழிவு மேலாண்மைக்கு 25.22 கோடியும், தெருவிளக்கு அமைக்க 30.25 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்தார்.

மேலும் மதுரையில் உள்ள 100 வார்டுகளுக்கும் நிரந்தரமாக குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வண்ணம் 1,250 கோடி மதிப்பில் முல்லைப் பெரியார் லோயர் கேம்ப்பில் இருந்து இரும்பு குழாய் மூலம் குடிநீர் திட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

மதுரை மாநகர் வளர்ச்சிக்காக திட்டங்களை அள்ளித்தந்தது மட்டுமல்லாது, மதுரை மாநகர மக்களின் கோரிக்கையான கோரிப்பாளையத்தில் புதிய மேம்பாலம் கட்ட முதல் கட்டமாக 164 கோடி நில எடுப்பு பணி நடவடிக்கைக்கு ஒதுக்கப்பட்டத்திற்கு மதுரை மாநகர் மக்களின் சார்பில், முதலமைச்சருக்கு மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கோடானு கோடி நன்றியை தெரிவித்து மதுரை மக்களின் சார்பில் பூங்கொத்து வழங்கினார்.