தற்போதைய செய்திகள்

எடப்பாடியாரை கழக பொதுச்செயலாளர் ஆக்குவோம் -முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சபதம்

கிருஷ்ணகிரி

ஒற்றைத்தலைமை நாயகன் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக மக்கள் விரும்புகின்றனர். எனவே அவரை கழக பொதுச்செயலாளராக ஆக்குவோம் என்று முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி சபதம் ஏற்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி பாகலூர் சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி, ஒற்றைத்தலைமை நாயகன் எடப்பாடி கே.பழனிசாமி பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டும். கழகத்தை தலைமை தாங்கி நடத்த வேண்டும் என்று தீர்மானத்தை வாசித்தார். அதனை தொண்டர்களும், பொதுக்குழு உறுப்பினர்களும் கைகளை தட்டி வரவேற்றதோடு தீர்மானமாக நிறைவேற்றினர்.

இதன்பின்னர் மாவட்ட கழக செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்தவர் எடப்பாடி கே.பழனிசாமி. இன்றைய சூழலில், கட்சி தொண்டர்களின் கோரிக்கை ஒற்றை தலைமையாக உள்ளது. பொதுக்குழுவில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் ஒற்றை தலைமையை கோரிக்கை வைக்கின்றனர். அந்த ஒற்றைத்தலைமையை எடப்பாடி கே.பழனிசாமி தான் ஏற்க வேண்டுமென விரும்புகின்றனர்

அவர் மீண்டும் தமிழக முதல்வராக வேண்டுமென இந்த ஓராண்டு தி.மு.க ஆட்சியில் தமிழக மக்கள் யோசிக்க தொடங்கி விட்டனர். எடப்பாடியார் மீண்டும் முதல்வராக வேண்டும் என்றால் அதற்கு அவர் ஒற்றை தலைமையாக பொறுப்பேற்க வேண்டும். அவர் பொதுச்செயலாளர் ஆக வேண்டும். அதை செய்து காட்டுவோம்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி கூறினார்.