தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்டுவோம் -கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் உறுதி

சென்னை
தி.மு.க. அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்டுவோம் என்று கழக அம்மா பேரவை செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
சென்னை தலைமை கழகத்தில் உள்ள புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகைளில் நேற்று தொடங்கிய கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர்களுக்கான செயல்திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாமில் கழக அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
திராவிட இயக்கத்தில் பெரியாரை மைய புள்ளியாக எடுத்துக்கொண்டு இதில் பெரியாருக்கு முன் அயோத்தி தாசர், நடேசன், பிடி.தியாகராஜன் உள்ளிட்ட ஐம்பெரும் தலைவர்கள் இருந்தனர்.
பெரியாருக்கு பின் எடுத்துக் கொண்டால் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா தற்போது கழக ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடியார் ஆகியோர் உள்ளனர்.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 69 சதவீத இட ஒதுக்கீட்டை தனி சட்டமாக இயற்றி இந்திய அரசியல் அட்டவணையில் இடம் பெற செய்து, சமூக நீதி காத்தார். அதனைத்தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு கிடைக்கும் வண்ணம் 7.5 உள் இடஒதுக்கீட்டை செய்து ஒரு சமூக புரட்சியை எடப்பாடியார்
உருவாக்கினார். இதற்கு உறுதுணையாக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார்.
அம்மா ஆட்சியில் விருது பெறாத துறைகள் எதுவுமே இல்லை. அந்த அளவில் அனைத்து துறைகளும் மிகவும் சிறப்பாக இயங்கி மக்களுக்கு சேவை செய்தன. தற்போது ஓராண்டு தி.மு.க ஆட்சியில் மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். மக்களிடம் இதை எடுத்துக்கூறி தேர்தலில் வெற்றியை அறுவடை செய்ய நாம் செயல்பட வேண்டும்.
இன்றைக்கு இந்த இயக்கத்தை சாமானியர்கள் தலைமை தாங்கி வழி நடத்தி சரித்திரம் படைத்து வருகிறார்கள். தற்போது எடப்பாடியார் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதலோடு கடந்த 4 ஆண்டு காலத்தில் நாம் செய்த சாதனை திட்டங்களை புத்தகமாக வெளியிட்டுள்ளோம்.
மாதந்தோறும் 20 கிலோ அரிசி, ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள், தாலிக்கு தங்கம் திட்டம், குடிமராமத்து திட்டம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டங்கள், இதுபோன்ற சில திட்டங்களை சாதனை புத்தகத்தில் வெளியிட்டுள்ளோம்.
ஆனால் முழுமையாக திட்டத்தை குறிப்பிட்டால் மிகப்பெரிய டிஜிட்டல் பேனர் வைக்கும் வகையில் இருக்கும். அந்த வகையில் விண்ணை முட்டும் அளவில் மக்களுக்காக சாதனை திட்டங்களை அம்மா அரசு செய்துள்ளது.
குறிப்பாக அதை நாம் மக்களிடத்தில் அம்மா அரசு செய்த சாதனை திட்டங்களையும் மக்கள் விரோத தி.மு.க அரசின் உண்மை நிலையை தோலுரித்து காட்டிடும் வண்ணம், கிராமம் தோறும் டிஜிட்டல் திண்ணை பிரச்சாரத்தில் மூலம் மக்களுக்கு எடுத்து சென்று, மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட நாம் அயராது களப்பணி ஆற்ற வேண்டும்.
இவ்வாறு கழக அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பேசினார்.