சிறப்பு செய்திகள்

ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதால் வளர்ச்சிப்பணிகள் பெருமளவு பாதிக்கப்படும்

பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேச்சு

சென்னை

ஊராட்சிகள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதால் ஊராட்சியின் வளர்ச்சிப்பணிகள் பெருமளவு பாதிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானதொரு சட்ட முன்வடிவு கொண்டு வரப்பட்டது. இதன் மீது எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

இச்சட்ட திருத்தத்தின்படி கிராம ஊராட்சி செயலாளர்களை பணியிட மாறுதல் செய்வதற்கு வழிவகை செய்யப்படுகிறது. ஊராட்சி உதவியாளர் என்ற பதவியினை ஊராட்சி செயலாளர் என்று பெயர் மாற்றம் செய்து 500 ரூபாய் ஊதிய உயர்வினை வழங்கியவர் புரட்சித்தலைவி அம்மா.

கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கியவர் எடப்பாடியார். தற்போதைய சூழலில் ஊராட்சி செயலாளர்களின் பங்கானது முக்கியமானது என்று நோக்க காரண விளக்கவுரையில் அரசே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஒரு ஊராட்சி செயலாளர் தேர்வு செய்யப்படும் பொழுது அவர் அந்த ஊராட்சியிலேயே வசிப்பவராக இருக்க வேண்டும். அங்கு தகுதியானவர் இல்லாவிட்டால், அதை ஒட்டியுள்ள ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாக உள்ளது.

அப்பொழுது தான் அந்த ஊராட்சியை பற்றி அவர்கள் நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். ஊராட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதால் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டது. இதைத்தான் நீங்கள் நேரக்க விளக்கவுரையில் தெளிவு படுத்தியுள்ளீர்கள்.

இச்சட்ட திருத்தத்தின் படி இவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டால், இவர்கள் தேர்வு செய்யப்பட்டதன் நோக்கமே மாறக்கூடிய சூழ்நிலை உண்டாகக்கூடிய நிலை உருவாகும். ஊராட்சியின் வளர்ச்சிப்பணிகள் பெருமளவு பாதிக்கப்படும்.

மேலும் இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமே வழங்கப்படுகிறது. எனவே இவர்களை பணி மாறுதல் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட இச்சட்ட திருத்தத்தின்படி இவர்கள் மாவட்டத்திற்குள் ஒரு பிளாக்கிலிருந்து மற்றொரு பிளாக்கிற்கோ, அல்லது வேறு மாவட்டங்களுக்கோ’ பணியிட மாறுதல் செய்யப்பட்டாலோ, குறைந்த பட்ச ஊதிய விகித சம்பளத்தில் உள்ள இவர்கள் குடும்பம் நடத்துவது என்பது மிகவும் கடினமாக இருக்கும்.

மேலும் பல பெண்கள் ஊராட்சி செயலளாளர்களாக பணியாற்றி வருகிறார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
எனவே இப்பணியிட மாறுதல் சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி பேசினார்.