தற்போதைய செய்திகள்

2021 தேர்தலில் தி.மு.க. என்ற தூசியை ஊதி தள்ளி விட்டு 100 சதவீத வெற்றியை கழக ஒருங்கிணைப்பாளர்களிடம் சமர்ப்பிப்போம் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் சூளுரை

திருச்சி

2021 தேர்தலில் தி.மு.க. என்ற தூசியை ஊதி தள்ளி விட்டு திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளின் 100 சதவீத வெற்றியை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கரங்களில் சமர்பிப்போம் என்று மாவட்டக் கழக செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான வெல்லமண்டி என்.நடராஜன் பேசினார்.

திருச்சி மாநகர் மாவட்டக் கழகத்திற்கு உட்பட்ட ஜங்சன், தில்லைநகர், உறையூர், மலைக்கோட்டை ஆகிய பகுதி கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் அந்தந்த பகுதி கழக செயலாளர்கள் நாகநாதர் பாண்டி, எம்.ஆர்.ஆர்.முஸ்தபா, என்.எஸ்.பூபதி, எம்.ஏ.அன்பழகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசியதாவது:-

அ.இ.அ.தி.மு.கவில் மட்டுமே சாதாரண தொண்டன் கூட, மாவட்டக் கழக செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, முதலமைச்சராக முடியும். அந்த வகையில் கட்சி வளர்ச்சிக்காக மிக சிறப்பாக பணியாற்றி வரும் கழக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கும் வகையில் அவர்களுக்கு கழகத்தில் பொறுப்புகள் வழங்க கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளனர். ஆகவே, தற்பொழுது மேடைக்கு எதிரே அமர்ந்திருக்கக்கூடிய பலருக்கும், அவரவர் உழைப்பிற்கும், வயதிற்கும் ஏற்ற பதவிகள் வழங்கப்பட உள்ளது.

மீன் குஞ்சுகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கத் தேவையில்லை. அதுபோல், பல்வேறு தேர்தல்களில் களப்பணியாற்றி வெற்றிவாகை சூடிய உங்களுக்கு தேர்தல் பணி குறித்து சொல்லித்தர வேண்டியதில்லை. தன் சொந்த தொகுதியான லால்குடி சட்டமன்ற தொகுதியில் நிற்க, நின்று வெற்றிபெற முடியாத தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் நிற்க வந்திருக்கிறார். 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள இந்த சட்டமன்ற தேர்தல் திருச்சியிலிருந்து கே.என்.நேருவை விரட்டியடிக்கிற தேர்தலாக அமையப்போகிறது.

எனவே, வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் திருச்சி மாநகர் மாவட்டக் கழகத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளிலும் தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் யார் வேட்பாளர்களாக நின்றாலும் தூசியை ஊதி தள்ளுவதைப்போல் ஊதி தள்ளி 2 சட்டமன்ற தொகுதியிலும் 100 சதவீத வெற்றிபெற்று அந்த வெற்றியை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கரங்களில் சமர்ப்பிக்க நாம் அனைவரும் சூளுரை ஏற்று களப்பணியாற்றுவோம்.

இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேசினார்.