தற்போதைய செய்திகள்

அரியலூரில் பெண்கள் கலைக்கல்லூரி, வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் – தாமரை எஸ்.ராஜேந்திரன் கோரிக்கை

சென்னை

அரியலூரில் பெண்கள் கலைக்கல்லூரி மற்றும் வேளாண் கல்லூரி அமைத்து தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாத்தில் தமிழக அரசின் தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் பேசியதாவது:-

“வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங்குடி”
எனும் வள்ளுவர் பெருமானின் வாக்குகிணங்க…..

உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல், ஒரு நாட்டில் குடிமக்கள் வாழ்வதற்கு நல்ல ஆட்சி தேவைப்படுகிறது. அந்த நல்லாட்சியை அம்மா அவர்களின் வழியில் தற்போது முதலமைச்சர் எடப்பாடியார் மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் செம்மையாக நடைபெற்று வருகிறது. அம்மா அவர்களின் வழியில் நடந்து வரும், இந்நல்லரசு ஒட்டுமொத்த செயல் திறன்மிக்க முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருவதுடன், தொடர்ந்து பல எண்ணற்ற விருதுகளையும் இம்மாநிலம் பெற்று வருவது, அம்மா அவர்களின் வழியில் வரும் பொற்கால ஆட்சிக்கு ஓர் நற்சான்றாகும்.

தமிழகம் அனைத்து துறையிலும் வளர்ச்சி பெற்று வருவதுடன், எந்த ஒரு அரசும் செய்திடாத ஒப்பற்ற சாதனையினை மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள் அமைந்திடவும், அதற்கான அடிக்கல் நாட்டு விழாக்களும் நடைபெற்று வருகின்றன. அதில் அரியலூர் மாவட்டத்திற்கும் கிடைக்கப்பெற்றது மகிழ்ச்சிக்குரியது எனது, அரியலூர் தொகுதி மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரியலூர் மாவட்டத்தில் , ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம் அமைந்திடவும், அப்பணிகளை மிக விரைவில் செயல்படுத்திட கேட்டுக் கொள்கிறேன். செந்துறை முதல் அரியலூர் வரை உள்ள நெடுஞ்சாலையினை அகலப்படுத்தி அதன் தொடர்ச்சியாக அமைந்துள்ள வட்டச் சாலையினை ஜெயங்கொண்டம் பிரிவு சாலை வரை அகலப்படுத்தியும், அதன் தொடர்ச்சியாக அமைந்துள்ள ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையினை வி.கைகாட்டி வரை அகலப்படுத்தி விரைந்து அமைத்திடவும்,

பெரம்பலூர் மாவட்டம் அல்லி நகரத்தில் தொடங்கி அரியலூர், திருச்சி பிரிவு சாலை வரை கிழக்கு புறம் தற்போது அமைந்துள்ளது அரை வட்டச் சாலை. அதனை, அல்லி நகரத்திலிருந்து மேற்கு புறமாக அரியலூர் திருச்சி பிரிவு வட்டச்சாலை வரை, புதிய வட்டச் சாலையினை, அமைத்து முழு வட்டச் சாலையாக விரைந்து அமைந்திட வேண்டும். அரியலூர் மாவட்டத்தையும், தஞ்சை மாவட்டத்தையும் இணைக்கின்ற வகையில் அரியலூர் திருமானூர் முதல் தஞ்சை மாவட்ட விளாங்குடி வரை கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள உயர் மட்டப்பாலம் 1975-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

அது தற்போது 50-ஆண்டுகளை கடந்து விட்டதால் அதன் அருகே புதிய உயர் மட்டப்பாலம் அமைத்து பழைய பாலத்தினை பழுது நீக்கி, இருவழி பாதையாக விரைந்து அமைத்துத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். அரியலூர் மாவட்டம், மழவராயநல்லூர்- ஆதனூர் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருதையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலத்தினை விரைந்து அமைத்திட வேண்டும். அரியலூர் மாவட்டம், முத்துவாஞ்சேரி-வைப்பூர் சாலை திட்டத்தினை விரைந்து செயல்படுதிடவும் கேட்டுக் கொள்கிறேன்.

அரியலூர் மாவட்டம், வைப்பூர் தூத்தூர் – தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் வாழ்க்கை கிராமத்திற்கும் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவனை அமைத்திட அம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை இந்த நிதியாண்டிலேயே செயல்படுத்திட கேட்டுக் கொள்கிறேன். அரியலூர் தொகுதி, உடையார்பாளையம் வட்டம், தேளூர் மின் அலுவலகத்திலிருந்து பிரித்து 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் நலன் கருதி விக்கிரமங்கலம் கிராமத்தில் ஒரு மின்பிரிவு அலுவலகத்தினை அமைத்திட கேட்டுக் கொள்கிறேன். அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், குவாகம் கிராமம் தற்போது தொலைவில் உள்ள உடையார்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதனை, அருகாமையில் உள்ள ஆண்டிமடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் இணைத்திடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், எனது அரியலூர் தொகுதியில் புறநகர் பேருந்து நிலையம் அமைத்திடவும், அரியலூர் தொகுதி த.குடிக்காடு, முத்துவாஞ்சேரி மற்றும் திருமானூர் ஒன்றியம் விழுப்பணங்குறிச்சி ஆகிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயத்திடவும், திருமானூர் ஒன்றியம்-வெங்கனூர் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்திடவும், அரியலூரில், மகளிர் கலைக் கல்லூரி அமைத்திடவும், வேளாண்மை கல்லூரி ஒன்றை அமைத்திடவும் முதலமைச்சரிடம் பேரவைத் தலைவர் வாயிலாக பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் பேசினார்.