தற்போதைய செய்திகள்

குடிமராமத்து திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை

குடிமராமத்து திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 வார்டு எண்.76 துரைச்சாமி நகர், வானமாமலை நகர் மற்றும் வார்டு எண்.21 சொக்கிலிங்க நகர் ஆகிய பகுதிகளில் நேற்று பெய்த கனமழையினால் தேங்கியுள்ள மழைநீரினை அகற்றும் பணியினை ஆணையாளர் ச.விசாகன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

தற்போது பெய்கின்ற மழையின் அளவு கூடுதலாக இருப்பதாலும், மழை தொடர்ந்து பெய்கின்ற காரணத்தினாலும் மழைநீர் அதிகளவில் தேங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே அதனை அகற்றுவதற்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொதுவாக குடிமராமத்து பணியின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. எனவே தமிழ்நாடு அரசின் குடிமராமத்து பணியினை அனைத்து வல்லுனர்களும், அனைத்து சமூகத்தினரும் பாராட்டி வருகிறார்கள். மதுரை மாநகரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சிக் காலத்தில் கூட குடிநீர் பற்றாக்குறை இல்லாத நிலைதான் ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சியின் மூலம் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கையினால் குடிநீர் பிரச்சனை இல்லாத நிலையை உருவாக்க முடிந்தது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் தேங்கும் மழைநீரினை அருகில் உள்ள மழைநீர் வடிகால்களிலும், பயன்பாடு அற்ற ஆழ்துளை கிணறுகளிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்களாக மாற்றுதல் போன்ற நடவடிக்கையினால் சாலைகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கு பிறகு மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு எப்போது எல்லாம் வைகை ஆற்றில் தண்ணீர் வருகிறதோ அப்போது எல்லாம் தூய்மையான தண்ணீரினை மாரியம்மன் தெப்பக்குளத்தில் வந்து சேருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இதனால் தெப்பக்குளத்தை சுற்றியுள்ள சுமார் 15 வார்டுகளின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இதனால் குடிநீர் பற்றாக்குறை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தேசிய தலைவர் அவர்கள் கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தினை உலகமே பாராட்டி கொண்டு இருக்கிறது. ஏழை எளியவர்களும் படித்து நல்லமுறையில் இருப்பதற்கு சத்துணவுத் திட்டம்தான் முக்கியக்காரணம். இந்தியாவிலேயே உயர்கல்வியில் 49.6 சதவீதம் கூடுதலாக இடம் பெற்று முதலிடத்தில் உள்ளோம். வளர்நாடுகளுக்கு இணையாக உயர்கல்வி சேர்க்கையில் இடம் பெற்றுள்ள நாடு நம்முடைய தமிழ்நாடு ஆகும். இந்த வாய்ப்பினை உருவாக்கியவர்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் வழியில் முதலமைச்சர் தமிழ்நாட்டில் மிகச்சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன், நகரப் பொறியாளர் அரசு, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் தலைவர் ஜெ.ராஜா, உதவி ஆணையாளர்கள் பி.எஸ்.மணியன், சேகர், செயற்பொறியாளர் முருகேச பாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், உதவி செயற்பொறியாளர் ஆரோக்கிய சேவியர். சுகாதார அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.