தற்போதைய செய்திகள்

கோவையில் குழப்பம் ஏற்படுத்த தி.மு.க. எம்.எல்.ஏ முயற்சி – அம்மன் கே.அர்ச்சுணன் குற்றச்சாட்டு

கோவை

கோவையில் குழப்பம் ஏற்படுத்த தி.மு.க. எம்.எல்.ஏ முயற்சிக்கிறார் என்று மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 7.11.2020 அன்று, சிங்காநல்லூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், முதல்வர் வருகையின் போது பொதுமக்களிடம் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அவருக்கு அவருடைய தலைமையை திருப்திப்படுத்துவதற்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், தன் இருப்பை காட்டிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தினால் நல்லமுறையில் பல திட்டங்களை கோவை மண்ணுக்கு பெற்றுத்தந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை வசைபாடுகிறார்.

முதலில் இவர்மேல் திமுக தலைமை நம்பிக்கை இல்லாமல் தான் இரண்டு தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக குறைத்து உள்ளார்கள். அதை சரிக்கட்ட தான் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை குறை கூறுகிறார். ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகள் தமிழகத்தில் மிக நல்லமுறையில் செயல்படுத்தப்பட்டதால் தான் இந்திய அளவில் இரண்டாம் பரிசும், தமிழகத்தில் கோவை முதல் இடத்திலும் உள்ளது.

கோவையின் குளக்கரை மக்களுக்கு இன்று ஒரு பொழுதுபோக்கு அம்சமாக வெளிநாட்டிற்கு இணையாக ரம்மியமாக காட்சி அளிப்பதை கோவை மக்கள் அனைவரும் கட்சிப்பாகுபாடு பாராமல் அமைச்சரை பாராட்டுகின்றனர்.கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கோயம்புத்தூர் பெரியகுளம் புனரமைப்பு பணிகள் ரூ.101.81, கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. இதில் குயிக்வின் புராஜக்டாக பெரியகுளம் வடக்கு கரை பகுதி 39.64 கோடி ரூபாய் செலவில் பணிகள் முடிக்கப்பட்டு முதலமைச்சரால் 25.03.2020அன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் நடைபயிற்சி பாதை, மிதிவண்டி பாதை, இசை நிகழ்ச்சி நாடகங்கள்,கலை காட்சியகங்கள் மற்றும் பல வசதிகள் உள்ளன. மேலும் மீதம் உள்ள குளக்கரை பணிகள் பெரியகுளம் பகுதி 1 என்ற பெயரில் ரூ.62.17 கோடி செலவில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதில் உள்ள அனைத்து நுழைவு வாய்க்கால்களும் சுத்திகரிக்கப்பட்டு குளத்தின் நீர் மாசுபடாமல் இருக்க 4 எம்எல்டி சுத்திகரிப்பு நிலையம் ரூ.4 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் 5.1 கிலோ மீட்டர் நீளமுள்ள குளக்கரை மேம்படுத்தப்படும்.கோவை பெரியகுளம், வாலாங்குளம், செல்வசிந்தாமணி குளம், குமாரசாமி குளம் மற்றும் குறிச்சி குளம் ஆகிய அனைத்து குளங்களுக்கு வந்து சேரக்கூடிய கழிவுநீர் நுழைவு வாய்க்கால்களும், நவீனமுறையில் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே குளத்திற்கு சென்றடையும் வகையில் சுத்திகரிப்பு பணிகளும் நடைபெற்று வருகிறது.

முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு தமிழகத்திற்கும், கோவை மாவட்டத்திற்கும், தந்துள்ள வளர்ச்சித் திட்டங்களை போன்று கடந்த 50 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை எண்ணி பார்த்ததுண்டா? தலைமுறை கடந்த சிந்தித்து செயல்படுத்தப்பட்டு வருகின்ற கோவையின் வளர்ச்சிப்பணிகள் சாதனைகளாக தெரியவில்லையா.

ஏழை, மாணவ, மாணவிகள் மிக குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி பயில 5 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் கொண்டு வந்தது சாதனை திட்டம். தமிழகத்திலேயே முதன் முதலில் 10.01 கிலோ மீட்டர் உப்பிலிபாளையம் முதல் விமானநிலையம் வரை மிக நீளமான உயர்மட்ட மேம்பாலம் ரூ.1621.30 கோடியில் கொண்டு வந்து செயல்படுத்தப்பட உள்ளது. சாதனை இல்லையா?

அத்திக்கடவு – அவிநாசி திட்டம், கரிகாலன் காலத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்ட குடிமராமத்து திட்டம், நொய்யல் ஆறு மேம்பாட்டுத் திட்டம், பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டம், எதிர்கால சந்ததியினர் பயன்படும் வகையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எல்லாம் சாதனை திட்டங்கள் இல்லையா ?

ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகளில் தரமில்லாத பொருட்களை பயன்படுத்தி, தரமில்லாமல் செயல்படுத்தப்படுகிறது. என பொத்தாம் பொதுவாக திட்டம் எப்படி செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளாமல் உண்மைக்கு புறம்பாக குற்றம் சாட்டுக்கிறார். இத்திட்டப்பணிகள் அனைத்தும் ப்ராஜக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்ட் என்ற மூன்றாம் நபர் ஏஜென்சி மூலம் கண்காணித்து தரச்சான்று பெற்று பணிகள் நடைபெற்று வருகிறது.

கோவை குளங்களில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட்சிட்டி திட்டப்பணிகளை அறிந்து, மத்திய சுற்றுலாத்துறை செயலர், வெகுவாக பாராட்டி உள்ளார் என்பது செய்தித்தாள் வழியாக கோவை மக்கள் நன்கு அறிந்த ஒன்றாகும். அதிலும் குறைகூறும் நோக்கில் ஐ.லவ் கோவை என எழுதி வைத்ததனாலும், கோவை அழகாக ரம்மியாக மாறிவிடுமா? எனவும் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக, கூக்குரல் இடுகின்றார்.

முதலமைச்சர் எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு கோவையின் வளர்ச்சிக்காக அனைத்து முக்கிய சாலைகள் விரிவாக்கம், மேம்பாலங்கள் குடிநீர் திட்டப்பணிகள், தடையில்லா மின்சாரம், விமான நிலைய விரிவாக்க திட்டம், ராணுவ தளவாட பூங்கா என பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினருக்கு என்ன தேவையோ அதை எல்லாம் முன்னெடுத்து முதல்வர் எடப்பாடியாரின் பார்வைக்கு கொண்டு சென்று உள்ளாட்சித்துறை அமைச்சர் பெற்றுதந்து உலகத்தரம் வாய்ந்த நகரமாக கோவையை மாற்றி வருவதை கண்டு பொறுக்காமல் வீண் அறிக்கை வெளியிட்டு குழப்பம் விளைவிக்க திமுகவினர் முயல்கின்றனர்.

மக்கள் ஒரு போதும் உங்கள் பசப்பு வார்த்தைகளை நம்ப மாட்டார்கள். மக்களிடம் இருந்து வெகு தொலைவு சென்று வீட்டீர்கள். மக்களில் ஒருவராக இருந்து திட்டங்கள் வழங்கும் முதல்வர் எடப்பாடியார் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோரை மக்களிடமிருந்தும், மக்கள் பணியிலிருந்தும் பிரிக்க முடியாது.

மக்கள் மத்தியில் அமைச்சருக்கும், முதல்வர் எடப்பாடியாரின் அரசுக்கும், பெருகிவரும் ஆதரவை கண்டு பொறுக்க முடியாமல் ஆதங்கத்தில் முதல்வர் கோவை வருகையின் போது பேட்டி கொடுத்து, குழப்பம் ஏற்படுத்த முயற்சித்துள்ளார்.
இவர் தான் சார்ந்த சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த நான்கரை ஆண்டுகளாக தொகுதி நிதியிலிருந்து சாலை வசதி, மழைநீர் வடிகால் போன்ற திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. அவருக்கு எதில் வருமானம் கிடைக்குமோ அதற்கு நிதி ஒதுக்கியவர். அவர் கூறுகிறார் போராட்டம் நடத்தப் போவதாக கூறியுள்ளார். ஒரு கட்சி தலைவரின் மகன் வந்தும் உங்களால் கூட்டத்தை கூட்ட முடியாமல் 5 மாவட்டம் சேர்ந்து கூட்டினீர்கள்.நாங்கள் நீங்கள் கூட்டிய கூட்டத்தை விட இரண்டு மடங்கு தெற்கு தொகுதி சார்பாக மட்டும் கூட்டத்தை கூட்டி காட்டினோம்.

உங்கள் சிங்காநல்லூர் தொகுதியில் இரண்டு இடங்களில் எங்களுக்கு கூடிய பொது மக்கள் கூட்டத்தை பார்த்து தான் உங்கள் கை கால்கள் நடுங்கி, எதையாவது பொய் மூட்டைகளை கூற வேண்டும் என்று பேட்டி கொடுத்து, நானும் கோவையில் தான் இருக்கின்றேன் என்று காட்ட முயற்சித்துள்ளீர்கள். ஆனால் மக்கள் உங்களை புறம் தள்ளிவிட்டார்கள் என்பதே உண்மை.

மக்கள் எங்கள் பக்கம் தான் என்பதை வருகின்ற 2021ல் சட்டமன்ற பொதுத் தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடியார் மீண்டும் முதல்வர் ஆக அரியணை ஏறும் வகையில் கழகத்திற்கு ஈடில்லா வெற்றியை தர உள்ளார்கள் என்பது திண்ணம்.

இவ்வாறு கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் கூறி உள்ளார்.