தற்போதைய செய்திகள்

ஆலங்குளம், சங்கரன்கோவிலில் புதிய கலைக் கல்லூரி – பேரவையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

சென்னை

ஆலங்குளம், சங்கரன்கோவிலில் புதிய கலை கல்லூரி அமைக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பலராமன், பொன்னேரி தொகுதியில் மகளிர் கலை அறிவியல் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலளிக்கையில், உறுப்பினர் கூறும் பகுதியில் ஏற்கனவே ஒரு மகளிர் கல்லூரி உள்ளது. அதேபோல் அரசு கல்லூரி, சுயநிதி கல்லூரி, உறுப்பு கல்லூரிகள் உள்ளன. அங்கு ஒப்பளிக்கப்பட்ட இடம் முழுவதுமாக நிரம்பவில்லை. அங்கு கூடுதல் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. அங்கு கட்டடத்தை புதுப்பிக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதனைத் தொடர்ந்து ஆலங்குளம் தொகுதி உறுப்பினர் பூங்கோதை பேசுகையில், ஆலங்குளம் தொகுதியில் கல்லூரி துவங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதையே அமைச்சரும் தெரிவித்திருக்கிறார். ஆலங்குளத்தில் தொடங்கப்படும் கல்லூரி, கலை கல்லூரியாக இல்லாமல் அறிவியல் கல்லூரியாக அமைத்து தர வேண்டும். அதற்கு ஆலடி அருணா அறக்கட்டளையிலிருந்து இலவசமாக இடம் தர தயாராக இருக்கிறோம். நிதி உதவி வழங்கவும் தயாராக இருக்கிறார்கள் என்றார்.

இதற்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலளிக்கையில், ஆலங்குளத்தில் கலை கல்லூரி தொடங்கப்படும். அதைத்தொடர்ந்து விருப்பப்படும் பாடப்பிரிவுகள் வழங்கப்படும். அம்மாவின் அரசு தான் 1,666 புதிய பாடப் பிரிவுகளை தொடங்கி வைத்துள்ளது. புதிதாக பிரித்த தென்காசி மாவட்டத்தில் 2 கல்லூரிகளை அறிவித்த அரசு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் அரசு. ஆலங்குளத்தில் ஒரு கல்லூரியும், சங்கரன்கோவிலில் ஒரு கல்லூரியும் அமைக்கப்படும் என்றார்.