தற்போதைய செய்திகள்

அம்மா உணவகம் மூலம் ஏழைகளுக்கு உணவு வழங்குவதை அரசியலாக்குவதா? எதிர்க்கட்சிகளுக்கு, அமைச்சர் ஆர்.காமராஜ் கண்டனம்

திருவாரூர்

அம்மா உணவகம் மூலம் ஏழை மக்களுக்கு உணவு வழங்குவதை எதிர்க்கட்சியினர் அரசியலாக்க வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட தூய்மை பணியாளர்கள் 150 பேருக்கு அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது-

தமிழக அரசின் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பரவல் மூன்றாம் நிலைக்கு செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தனித்து இருப்பதன் மூலம் இந்நோயை விரட்டலாம். ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் விவசாய பணிகளுக்கு எந்த தடையும் இல்லை. மார்ச் 24 அன்று ஊரடங்கு உத்தரவு அமலில் வந்ததற்கு பிறகு தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் இதுவரையில் ஒன்றரை லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அரசின் கிடங்கிலிருந்து 3 லட்சத்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரவை மற்றும் கிடங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு டெல்டா மாவட்டங்களில் நெல் அபரிமிதமாக விளைந்த காரணத்தினால் விவசாயிகளிடம் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்குவதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்க வேண்டாம்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மன்னார்குடி ஆர்டிஓ புண்ணியகோட்டி, நகராட்சி ஆணையர் தாசில்தார் தெய்வநாயகி, நகர செயலாளரும், கூட்டுறவு நகர வங்கி தலைவருமான பஷீர் ராஜசேகர் மற்றும் பலர் உடனிருந்தனர்.