தற்போதைய செய்திகள்

சசிகலாவின் சூழ்ச்சி எந்த காலத்திலும் பலிக்காது-முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டம்

கரூர்,

ஜாதி பாகுபாட்டை புகுத்தி கழகத்தை கைப்பற்ற துடிக்கும் சசிகலாவின் சூழ்ச்சி எந்த காலத்திலும் பலிக்காது என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர் மாவட்ட கழக நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட கழக அவைத்தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரையற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அம்மா அவர்களின் நல்லாசியுடன் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரும் தொண்டர்களின் பேராதரவோடு கழகத்தை சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர். அதை பொறுத்துக்கொள்ள முடியாத சசிகலா கழகம் குறித்து சம்பந்தமில்லாத கருத்துக்களை செல்போனில் பேசி வருவதையும் கழக தொண்டர்கள் கட்டுக்கோப்பாக இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஜாதி பாகுபாட்டை கழகத்திற்குள் நுழைத்து கைப்பற்ற முயற்சிக்கும் சசிகலாவின் சூழ்ச்சி எந்த காலத்திலும் பலிக்காது.

சசிகலா விரிக்கும் சூழ்ச்சி வலையில் கழக தொண்டர்கள் சிக்க மாட்டார்கள். கழக தொண்டர்களிடம் சசிகலாவின் கபட நாடகம் பலிக்காது. பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் செயல்படும் சசிகலாவை எந்த காலத்திலும் நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.