திருவாரூர்

அம்மா குடிநீர் விற்பனை நிலையத்துக்கு பூட்டு-மீண்டும் திறக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவாரூர்,

நன்னிலம் பேருந்து நிலையத்தில் மூடப்பட்டிருக்கும் அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஒரு லிட்டர் தண்ணீர், 10 ரூபாய் விலையில், அம்மா குடிநீர் பாட்டில் விற்பனை செய்யும் திட்டத்தை,மறைந்த முன்னாள் முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவக்கி வைத்தார். இதற்காக, அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில், 2.47 ஏக்கர் பரப்பளவில், 10.5 கோடி ரூபாயில் அம்மா” குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களுக்கு தலா, ஒரு விற்பனை நிலையம் என, 1000-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வந்தன. தனியார் குடிநீர் பாட்டில், 1 லிட்டர் 20 ரூபாய்க்கு விற்கும் நிலையில், அம்மா குடிநீர், 10 ரூபாய்க்கு விற்பனையானதால் மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேருந்து நிலையத்தில் தனியார் நிறுவனத்துக்கு ஈடுகொடுக்கும் வகையிலான தரத்துடன்அம்மா குடிநீர் விற்பனை நடைபெற்று வந்தது. ஆனால், தற்பொழுது பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த அம்மா குடிநீர் நிலையம் சில மாதங்களாக பூட்டி கிடைக்கிறது.

மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட அம்மா குடிநீர் மீண்டும் கிடைக்க, நன்னிலம் பேருந்து நிலையத்தில் அம்மா குடிநீர் விற்பனை நிலையத்தை திறந்திட, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.