திருப்பூர்

குன்னத்தூர் பேரூராட்சியில் வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்

திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மனு

திருப்பூர்,

குன்னத்தூர் பேரூராட்சியில் வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார் மனு கொடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் எஸ்.வினீத்தை கழக அம்மா பேரவையின் மாநில இணை செயலாளரும், பெருந்துறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜே.கே.ஜெயக்குமார் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

குன்னத்தூர் பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. தற்போது புதிய கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் போதிய தண்ணீர் வரத்து உள்ளதால் புதிய வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.

குன்னத்தூர் பேரூராட்சியில் பில் கலெக்டர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் அலுவலக பணிகளில் தாமதம் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே மேற்கண்ட பதவியிடங்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும். குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகம் மிகப்பழமை வாய்ந்த கட்டிடமாக உள்ளதாலும் அதன் உறுதித்தன்மை குறைந்துள்ளதாலும் பேரூராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டித் தர வேண்டும்.

குன்னத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணிகளுக்காக ஒரு டிராக்டர் இழுவை வண்டி மட்டும் உள்ளது. இதனால் குன்னத்தூர் நகர பகுதியில் அதிக அளவில் குப்பைகள் தேங்கி வருகிறது. எனவே குப்பைகளை அகற்ற கூடுதலாக புதிய டிராக்டர் வாங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும்.

மேலும் ஊத்துக்குளி செல்லும் ரோட்டில் கூலிப்பாளையத்தில் இருந்து ஊத்துக்குளி வரை குழி வெட்டப்பட்டு சாலை அமைக்காமல் இருப்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். அந்த சாலையை புதுப்பித்து தர வேண்டும்.

ஊத்துக்குளியில் இருந்து சென்னிமலை செல்லும் ரோட்டில் ரயில்வே கடவுப்பாலத்தில் மழைக்காலங்களில் மழை நீர் தேங்கி பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது. இதை சரி செய்து தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் ஜெயக்குமார் எம்.எல்.ஏ கூறி உள்ளார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட கவுன்சிலர் கன்னம்மாள் ராமசாமி, சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் மரகதமணி செல்வராஜ், குன்னத்தூர் பேரூராட்சி தலைவர் குமாரசாமி, துணை தலைவர் ஜோதிமணி, கவுன்சிலர் சரண்பிரபு, சுப்பிரமணியம், சரஸ்வதி, சின்னராஜ், பூங்கொடி, புஷ்பா, சுண்டக்காம்பாளையம் ஊராட்சி தலைவர் ஆனந்த், ஒன்றிய செயலாளர் தனசேகர், நகர கழக துணை செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் கே.பி.எஸ்.மணி, குன்னத்தூர் நகர கழக செயலாளர் பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.