சிறப்பு செய்திகள்

லாயிட்ஸ் காலனி குடியிருப்பு வாடகை – கட்டணத்தை குறைக்க அரசு பரிசீலனை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

லாயிட்ஸ் காலனி குடியிருப்பு வாடகை கட்டணத்தை குறைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சட்டப்பேரவையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் காலனியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளுக்கான வாடகை மற்றும் பராமரிப்புக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உறுப்பினர் ஜெ.அன்பழகன் ஆகியோர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு அளித்த பதில் வருமாறு:-

லாயிட்ஸ் காலனி பகுதியில் அரசு வாடகைக் குடியிருப்பு, வாரிய வாடகைக் குடியிருப்பு என இரண்டு குடியிருப்புகள் அங்கே கட்டப்பட்டு, அரசு ஊழியர்களுக்கும், பொது மக்களின் பயன்பாட்டுக்காகவும் வாடகைக்காக விடப்பட்டிருக்கிறது. இதில் வாடகை அதிகமாக விதிக்கப்பட்டிருக்கிறது என்றும், பராமரிப்புப் பணிகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவரும், உறுப்பினர் ஜெ.அன்பழகனும் இங்கே கவன ஈர்ப்பினை கொடுத்திருக்கிறார்கள். ஏற்கெனவே விவர அறிக்கை ஒன்று அவைமுன் வைக்கப்பட்டுள்ளது. அதில் விளக்கமாக நான் சொல்லியிருக்கிறேன். இருந்தாலும், அவைமுன் சில விளக்கங்களை கூறுவதற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

வாரிய வாடகை பொது ஒதுக்கீடு குடியிருப்புகளுக்கான வாடகையினை அரசு பொது ஒதுக்கீடு குடியிருப்புகளுக்கான வாடகையுடன் ஒப்பீடு செய்ததில், வாரிய வாடகையானது மிகவும் குறைவாக இருந்ததால், அரசாணை நிலை எண் 118, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நாள் 4-7-2017-ன்படி, அரசு பொது வாடகைக் குடியிருப்புகளுக்கு வசூல் செய்யப்பட்டு வரும் வாடகையினையே வாரிய வாடகைக் குடியிருப்புகளுக்கும் நிர்ணயம் செய்ய வாரியத்தின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டதில், மேற்குறித்த அரசாணையின்படி, அரசு ஊழியர் குடியிருப்பில் உள்ள பொது ஒதுக்கீட்டிற்கு உயர்த்தப்பட்ட வாடகை மற்றும் பராமரிப்புக் கட்டணத்தை பின்பற்றி, வாரிய வாடகைக் குடியிருப்புகளில் உள்ள பொது ஒதுக்கீடு –குடியிருப்புகளுக்கும் 1-2-2020 முதல் உயர்த்த தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தனது தீர்மானம் எண் 3.01, நாள் 13-1-2020 அன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பொது வாடகை – Public Quota குடியிருப்புகளுக்கு மாத வாடகையாக தற்பொழுது 1-2-2020 முதல் சென்னை மாநகரத்தைப் பொறுத்தமட்டில், சதுரடி ஒன்றிற்கு ரூ.14.15 வீதமும், புறநகரைப் பொறுத்தமட்டில் சதுரடி ஒன்றிற்கு ரூ.11.45 வீதமும் வசூலிக்கப்படுகிறது. சென்னை மாநகரிலுள்ள தனியார் வாடகை வீடுகளுக்கு சந்தை மதிப்பாக -Market Rent சதுரடி ஒன்றிற்கு தோராயமாக ரூ.25 என உள்ளது. இதை ஒப்பிடுகையில், வாரிய குடியிருப்புகளுக்காக தற்பொழுது நிர்ணயிக்கப்பட்ட வாடகை மிகவும் குறைவாகவே உள்ளது.

பராமரிப்பு கட்டணத்தைப் பொறுத்தவரையில், பராமரிப்புக் கட்டடணம், 2010 முதல் தனியாக வசூலிக்கப்படுகிறது. அதற்கு முன்னர் பராமரிப்புக் கட்டணம் இல்லை. ஆனால், தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் பராமரிப்புக் கட்டணம் ஏற்படுத்தப்பட்டது என்பதனை நான் இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தீர்மானம் எண் 9.03, நாள் 29-4-2010-ன்படிதான் மாதம் ஒன்றிற்கு ரூ.250 பராமரிப்புக் கட்டணமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை நான் இங்கே தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். இந்த கட்டணம் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கேற்ப, மாதம் ஒன்றிற்கு சென்னை மாநகரைப் பொறுத்தமட்டில் ரூ.1,100 எனவும், புறநகரைப் பொறுத்தமட்டில் ரூ.880 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலர் வாடகை குடியிருப்பில் வாடகை உயர்விற்கு ஆட்சேபனை தெரிவித்தவர்கள் உட்பட, அரசு அலுவலர் குடியிருப்புகளில் உள்ள அனைத்து பொது வாடகைக் குடியிருப்புதாரர்களுக்கும் – Public Quota Allottees உயர்த்தப்பட்ட மாத வாடகை மற்றும் பராமரிப்புக் கட்டணத்தை இன்றைக்கு செலுத்தி வருகின்றனர். அவர்கள் பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறார்கள். உயர் நீதிமன்றத்தில் அரசுக்கு சார்பாகவும், வாரியத்திற்கு சாதகமாகவும் தீர்ப்பு வழங்கப்பட்ட சூழ்நிலையில், இந்தக் கட்டணம் இப்பொழுது வசூலிக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

ஒரே திட்டப் பகுதியில் அமைந்துள்ள இரண்டு வகையான குடியிருப்புகளுக்கு முரண்பாடான நிலையில் வாடகை வசூல் செய்யப்பட்டு வந்ததை சமன் செய்யும் பொருட்டுத்தான், அரசு அலுவலர் பொது ஒதுக்கீட்டின்கீழ், நிர்ணயிக்கப்பட்ட அதே அடிப்படையில் ஒரே திட்டப் பகுதியில் இருக்கக்கூடிய வாரிய வாடகை குடியிருப்பைச் சேர்ந்த பொது வாடகை – குடியிருப்புதாரர்களுக்கும் மேற்குறித்த விவரப்படி பிப்ரவரி 2020 முதல் மாத வாடகையும், பராமரிப்புக் கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த உயர்வானது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து வாரிய வாடகைக் குடியிருப்புகளில் உள்ள பொது ஒதுக்கீடுதாரர்களுக்கும் -Public Quota நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த வாடகை உயர்வினை குறைக்கக் கோரி பல்வேறு முறையீடுகள் இங்கே வரப்பெற்றுள்ளன. எதிர்க்கட்சித் தலைவரும், உறுப்பினர் அன்பழகனும் மற்றும் சட்டமன்றத்தில் இருக்கிற பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்களும், அங்கு Public Quota-ல் குடியிருந்து வருகின்ற பல்வேறு குடியிருப்புதாரர்களும் அரசினுடைய கவனத்திற்கும், வாரியத்தினுடைய கவனத்திற்கும் இந்தப் பிரச்சினையை கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை குறித்து முதலமைச்சரோடு கலந்து பேசி, உரிய முடிவை, பொதுவான முடிவை, வாடகையை குறைப்பது பற்றியும், பராமரிப்புக் கட்டணத்தைக் குறைப்பது பற்றியும் ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்பதனை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கும், உறுப்பினர் அன்பழகனுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடைய பதிலில் வாடகை உயர்வு பற்றியும் பராமரிப்புக் கட்டணம் குறைக்க வேண்டும் என்பதற்காகவும்தான் இங்கே கோரிக்கை வரப்பெற்றிருக்கின்றது, அது குறித்து அரசின் பரிசீலனையில் இருக்கின்றது, அதனை, முதலமைச்சரிடம் கலந்துபேசி, குறைப்பதற்கு உரிய நல்ல முடிவு எடுக்கப்படும் என்று நான் தெரிவித்திருந்தேன். அங்கே இருக்கின்ற நிர்வாக அலுவலகத்தை நந்தனம் பகுதிக்கு மாற்றி இருப்பதாக அரசினுடைய கவனத்திற்கு, வாரியத்தினுடைய கவனத்திற்கு கொண்டு வந்திருக்கின்றீர்கள். அது உறுதியாக அந்தப் பகுதியிலேயே நிறுவப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பழகனுடைய ஆரம்ப உரையில் இந்தக் கட்டடம் 1962-ல் கட்டப்பட்டது என்று சொன்னார். இதுபோன்ற 17 கட்டடங்களை அதன் உறுதித் தன்மை குறைந்திருக்கிறது என்பதற்கான காரணத்தைக் காட்டி அதனை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டிருக்கின்றது. அதில் Peters Colony-ம் இருக்கின்றது, நந்தனமும் இருக்கின்றது, Lloyds Colony-ம் இருக்கின்றது. ஆனால், அங்கே குடியிருப்பவர்களைக் காலி செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன. அங்கே முக்கியமானவர்கள் குடியிருந்து கொண்டிருக்கின்றார்கள். பக்குவமாகப் பேசிதான் ஒவ்வொருவராக காலி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

ஏற்கெனவே நீதிமன்றத்திற்கும் சென்றிருக்கின்றார்கள். அரசுக்கும், வாரியத்திற்கும் சாதகமாகத்தான் அங்கே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, உறுதித் தன்மையை இழந்த காரணத்தினால் ஏற்கெனவே G.O. போட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்ட சூழ்நிலையில் அங்கே குடியிருப்பவர்கள் சீக்கிரமாக குடியிருப்புகளைக் காலி செய்துவிட்டால், புதிய வீடுகளாக, தரமான வீடுகளாக, உறுதியான வீடுகளாக அந்த மக்களுக்கு உறுதியாக கட்டித் தரப்படும் என்பதனை நான் உறுப்பினருக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

ஏற்கெனவே இந்த Peters Colony-ல் திட்டம் வகுக்கப்பட்டு tender விடப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்தப் பகுதியில் குடியிருக்கின்ற குடியிருப்புதாரர்களுக்கு முறைப்படியான notice-ம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடைய குழந்தைகள் பள்ளிகளில் படிக்கின்ற காரணத்தினால் மே மாதம் வரை அவர்கள் எங்களிடம் அவகாசம் கேட்டிருக்கின்றார்கள். 6 மாத கால அவகாசம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே மே மாதத்திற்குள் அவர்கள் அந்த வீடுகளைக் காலி செய்து கொடுத்தால் அந்தப் பகுதியில் புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

வாகனங்களை பற்றிச் சொன்னார்கள். அங்கே குடியிருப்பவர்களின் ஒரு வாகனமோ, இரண்டு வாகனமோ அங்கே park செய்யப்பட்டிருப்பதைத் தவிர, வெளியில் இருக்கின்ற வாகனங்கள் உள்ளே வராமல் தடுப்பதற்கு உண்டான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.