காஞ்சிபுரம்

கழகத்தின் ஒற்றை தலைமையை எடப்பாடியார் ஏற்பதை தடுக்க முடியாது -வி.சோமசுந்தரம் திட்டவட்டம்

காஞ்சிபுரம்

எடப்பாடியார் தான் கழகத்தின் தலைமையை ஏற்க வேண்டும் என்று ஒன்றரை கோடி தொண்டர்கள் முடிவு செய்து விட்டார்கள். இதை யாராலும் தடுக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் கிழக்கு, மேற்கு, மத்திய ஒன்றியம் மற்றும் நகர கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் திருப்புலிவனத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான வி.சோமசுந்தரம் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

நடைபெற உள்ள பொதுக்குழுவில் எடப்பாடியார் ஒற்றைத்தலைமையாக ஏற்பது உறுதியான நிலையில் நாம் அனைவரும் பொதுக்குழுக்கு வருகை தரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவுக்கு பின்னால் நான்கு ஆண்டு ஆட்சி காலத்தில் கழகத்தையும், கழக ஆட்சியையும் காப்பாற்ற எடப்பாடியார் சந்தித்த துயரங்கள் கொஞ்சம் அல்ல.

ஆட்சியை கலைப்பதற்கு ஒரு புறம் தி.மு.க நாள் குறித்து வந்தது, மற்றொருபுறம் தினகரன் கட்சியை ஆரம்பித்து கழகத்தை அழிக்க நினைத்த போதிலும் பல்வேறு சோதனைகளில் ஆட்சியையும் கழகத்தையும் கட்டிக்காத்தவர் எடப்பாடியார். அதனால் தான் இன்று ஒட்டுமொத்த தொண்டர்களும் ஒற்றை தலைமைக்கு ஏற்றவர் எடப்பாடியார் என்று ஒருமித்த குரலாக ஒலிக்கிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு பின்னாலும் கழகம் நூறு ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும் என கூறியதை நிறைவேற்றக்கூடிய ஒரே தலைவராக ஒப்பற்ற தலைவராக எடப்பாடியார் உள்ளார்,

அவருக்கு பின்னால் செல்வதை தான் மாநில, மாவட்ட மற்றும் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் விரும்புகின்றனர், புரட்சித்தலைவர் தொண்டர்களுக்காக தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தை கடந்த ஒரு மாத காலமாக கழகத்தையும் சின்னத்தையும் முடக்க நினைக்கும் ஓபிஎஸ்சின் செயலால் அனைத்து தொண்டர்களும் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.

தி.மு.க விடியல் தருவதாக கூறி ஆட்சிக்கு வந்தனர். இதுவரை எதுவும் விடிந்த பாடில்லை. மக்களுக்கு எதிரான ஆட்சி தான் நடைபெற்று கொண்டிருக்கிறது.

எங்கு பார்த்தாலும் அரசு ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், செவிலியர்கள் என பல்வேறு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் சம்பளம் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை நாம் அன்றாட நிகழ்வாக பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

கழக ஆட்சியில் ஒரு நாள் கூட நிதி இல்லை. நிதி பற்றாக்குறை என்பதை கூறியதே இல்லை, ஆனால் தற்போது தி.மு.க நிதி அமைச்சர் எதை கேட்டாலும் நிதி இல்லை, நிதி இல்லை என இவர்களின் கையாலாகாத, திறமையற்ற, விடியா ஆட்சியின் குறைகளை மறைக்க இப்படி சொல்லி திரிகின்றனர்.

எத்தனை நீதிமன்றங்கள் சென்றாலும், எத்தனை பொய் வழக்கு போட்டாலும் கவலை இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்கள் முடிவு செய்து விட்டார்கள். எடப்பாடியார் தான் கழகத்தின் தலைமை ஏற்க வேண்டும் என்று, இதை யாராலும் தடுக்க முடியாது.

இவ்வாறு முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான வி.சோமசுந்தரம் பேசினார்.