தற்போதைய செய்திகள்

3501 நகரும் நியாய விலை கடைகள் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

சட்டப்பேரவையில்  முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை

1. பல்வேறு தரப்பில் இருந்து வரும் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, 3,501 நகரும் நியாய விலைக் கடைகள் 9.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும்.

2. கூட்டுறவு நிறுவனங்களில் உட்கட்டமைப்பு வசதியினை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு நவீன வங்கி சேவையினை அளிக்கும் பொருட்டு, 95 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 6 மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், ஒரு நகரக் கூட்டுறவு வங்கி, ஒரு நகர கூட்டுறவுக் கடன் சங்கம், ஒரு தொடக்க கூட்டுறவு பண்டக சாலை மற்றும் ஒரு பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கம் என மொத்தம் 105 கூட்டுறவு கடன் நிறுவனங்களுக்கு, 27.74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சொந்த அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும்.

3. வணிக வங்கிகளுக்கு இணையாக, புதிய வசதிகளுடன் கூடிய நவீன வங்கிச் சேவையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிட ஏதுவாக, 74 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மத்திய கூட்டுறவு வங்கிகள், 3 நகர கூட்டுறவு வங்கிகள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ஒரு தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி என மொத்தம் 95 கூட்டுறவு நிறுவனங்கள், 14.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீனமயமாக்கப்படும்.

4. புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய தலைமை அலுவலகக் கட்டடங்களும், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டடமும், 17.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

5. சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், மஞ்சக்குட்டை ஊராட்சி, செம்மடுவு கிராமத்தில் 15.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாநில அளவிலான புதிய கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.

6. காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு சென்னை, தண்டையார்பேட்டையில் அந்நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள இடத்தில் 5.65 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், காஞ்சிபுரம் நகரிலுள்ள மற்றொரு இடத்தில் 4.15 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் 2 திருமண மண்டபங்கள் கட்டப்படும்.

7. அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் மக்களின் வரவேற்பினை பெரியளவில் பெற்றுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் 189 அங்காடிகள் கூடுதலாக துவங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.