தற்போதைய செய்திகள்

மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு கையில் முத்திரை – பேரவையில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

சென்னை

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு கையில் முத்திரை குத்தப்பட்டுள்ளது. இது மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், கொரோனா வைரஸ் நோயை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பதில் அளித்து பேசியதாவது:-

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் இதுவரை 5 முறை மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி கொரோனா வைரஸ் நோய் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கி உள்ளார். ஒவ்வொரு கனப்பொழுதும் முதல்வர் இதில் முழுகவனம் செலுத்தி தேவையான அறிவுரைகளை வழங்கி வருகிறார். நேற்று ( நேற்றுமுன்தினம்) பிரதமர் 2 மணி நேரம் அனைத்து முதலமைச்சர்களுடன் ஆய்வு நடத்தி இருக்கிறார்.

ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு முழு பரிசோதனை செய்யப்படுகிறது. விமான நிலையத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நான் தினமும் பிற்பகலில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நிலைமைகள் குறித்து செய்தியாளர்களுக்கு தொடர்ந்து விவரம் தெரிவித்து வருகிறேன்.

மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் எண்ணிக்கையை இப்போது 3 மடங்கு உயர்த்தி இருக்கிறோம். தனி வார்டுகள் அமைத்திருக்கிறோம். 1100 வென்டிலேட்டர்கள் இருக்கிறது. மேலும் 560 வென்டிலேட்டர்களுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறோம். போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். தேவையான மருந்துகள், கருவிகள் வாங்க நேரமில்லாத காரணத்தால் டெண்டர் போட தேவையில்லை என்று விதி தளர்த்தப்பட்டுள்ளது. தேவையான நிதி ஒதுக்குவதற்கு முதலமைச்சர் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் முக கவசங்கள் ஆர்டர் கொடுத்திருக்கிறோம். அது வந்து கொண்டிருக்கிறது. அதேபோல 10 லட்சம் 3 அடுக்கு முக கவசத்திற்கு ஆர்டர் கொடுத்திருக்கிறோம். முக கவசம், வெண்டிலேட்டர், தெர்மல் ஸ்கேனர் ஆகியவை அனைத்தும் எல்லா நாடுகளுக்கும் தேவைப்படுவதால், அவைகளுக்கு தட்டுப்பாடு இருக்கிறது. நாம் ஜனவரி மாதமே ஆர்டர் கொடுத்திருக்கிறோம். அதனால் பிரச்சினை இல்லை. தேவையான மருந்துகளை கொள்முதல் செய்திருக்கிறோம்.

டி.எம்.எஸ் அலுவலகத்தில் உள்ள 104 இலவச அழைப்புக்கு 1000 அழைப்புகள் கண்ட்ரோல் ரூமுக்கு வந்துள்ளன. அங்கு இரவு பகலாக 3 ஷிப்டுகளில் பணி செய்கிறார்கள். உச்சக்கட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஏற்கனவே சென்னை கிங் இன்ஸ்டிடியூட், ராஜீவ் காந்தி மருத்துவமனை, திருவாரூர், தேனி, நெல்லை, சேலம் ஆகிய இடங்களில் கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது திருச்சி மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, வேலூர் மருத்துவமனைக்கும் அனுமதி வழங்கப்பட இருக்கிறது.

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் ஏற்கனவே ரூ.60 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறார். மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து எவ்வளவு நிதி வேண்டுமோ அதனை பெற்றுக்கொள்ளலாம் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற மருத்துவர்களை சிறப்பு பணியில் அமர்த்த அரசு முடிவு செய்திருக்கிறது. எனவே இதற்கு பணி செய்ய ஓய்வுபெற்ற மருத்துவர்கள் வரலாம். தனியார் மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் உள்ளன. சிறப்பு வார்டுகள் எவ்வளவு உள்ளன என்ற கணக்கு கேட்டிருக்கிறோம். எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் தீவிர மருத்துவ பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். மருந்து உற்பத்தியாளர் சங்கத்தினரை வைத்து மருந்துகளை அதிக விலைக்கு விற்க கூடாது என அறிவுறுத்தி இருக்கிறோம். முடி திருத்துவோர் கடையில் பணிபுரிந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் ஊருக்கு சென்றுவிட்டு சென்னை திரும்பியபோது அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் யார் யாருடன் பேசினார். எங்கெங்கு சென்றார் என்பதை எல்லாம் தொடர்ந்து கண்காணித்து 24 மணி நேரத்தில் 193 பேரை கண்டுபிடித்து அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
விமான நிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்திறங்கும் பயணிகள் டாக்சிகளை பிடித்து செல்வது பெரும் சவாலாக உள்ளது. எனவே அங்கு போக்குவரத்து கழகம் சார்பில் 5 மினி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் கிருமிநாசினி அடிக்கப்பட்டு மிகவும் சுகாதார முறையில் உள்ளது.

விமான பயணிகள் ஓட்டல்களுக்கோ அல்லது அவர்களது வீடுகளுக்கோ செல்ல வேண்டுமானால் இந்த பஸ்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான பயணிகள் தங்களது சொந்த கார்களில் பயணம் செய்யலாம். டாக்சிகளை பயன்படுத்த வேண்டாம். மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு கையில் முத்திரை குத்துகிறோம். பிற மாநிலங்களில் செய்யாத நடவடிக்கைகளை எல்லாம் நாம் எடுத்திருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.