தற்போதைய செய்திகள்

தி.மு.க அரசை விரட்டியடிக்கும் காலம் வெகு விரைவில் வரும்

முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ பேட்டி

தூத்துக்குடி

இலங்கையில் நடந்தது போல் தமிழகத்தில் மக்கள் புரட்சி ஏற்பட்டு தி.மு.க அரசை விரட்டியடிக்கும் காலம் வெகு விரைவில் வரும் என்று கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ கூறி உள்ளார்              

கழக அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட பிறகு வாகைக்குளத்தில் உள்ள தூத்துக்குடி விமான நிலையத்துக்கு நேற்று வந்த முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-       

கள்ளக்குறிச்சியில் உள்ள பள்ளியில் படித்து வந்த மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது பெற்றோர்கள் தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தியும் அவர்களின் போராட்டத்தை திமுக அரசு கண்டுகொள்ளாததால் தான் மிகப்பெரிய அளவில் வன்முறை சம்பவம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத நிலை தான் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தி.மு.க. ஆட்சியில் மின் கட்டண உயர்வை தொடர்ந்து பஸ் கட்டண உயர்வு உட்பட பல்வேறு நிகழ்வுகள் ஏற்பட இருக்கிறது.

கழக ஆட்சியின் போது அனிதா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மரணமடைந்த சம்பவத்தை அப்போதைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த தி.மு.க தலைவரும், தற்போதைய முதலமைச்சருமாக மு.க.ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை எப்படியாவது ரத்து செய்வோம் என்று கூறினார்.

ஆனால் ஆட்சிக்கு வந்த திமுக அரசால் இதுவரை நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. இதனால் தற்போது வரை 11 மாணவிகள் நீட் தேர்வில் தோல்வியடைந்து மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தி.மு.க. அரசு இதற்கு என்ன பதில் கூறப்போகிறது என்பது தான் மக்களின் கேள்வியாக உள்ளது.

இலங்கையில் ஆட்சியாளர்களின் நிர்வாக திறமை இல்லாத செயல் காரணமாக அங்கு பொருளாதார சீர்கேடு ஏற்பட்டு புரட்சி ஏற்பட்டு ஆட்சியாளர்கள் மக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். அதேபோன்று விரைவில் தமிழகத்தில் மக்கள் எழுச்சி ஏற்பட்டு தி.மு.க ஆட்சி விரட்டியடிக்கப்படும் நாள் வெகு தூரமில்லை.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ கூறினார்.