காஞ்சிபுரம்

மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் தாக்கு

காஞ்சிபுரம்

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின் என்று முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கூறினார்.

உள்ளாட்சி தேர்தல் குறித்து காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் கிழக்கு, மேற்கு, பேரூராட்சி கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் வாலாஜாபாத் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் அக்ரி நாகராஜ், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அத்திவாக்கம் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

ஏழை. எளிய மக்களின் இன்னல்களை போக்கியவர் எடப்பாடியார். மக்கள் விரோத ஆட்சி நடத்தி கொண்டிருப்பவர் திமுக தலைவர் ஸ்டாலின். அவர் முதலமைச்சரான பிறகு கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் அம்மா சிமெண்ட். தற்போது மாவட்டத்தில் எங்கும் அம்மா சிமெண்ட் கிடைப்பதில்லை. அந்த சிமெண்ட்டை ரூ.190க்கு வாங்கி ஏழை எளியோர் பயனடைந்தனர்.

ஆனால் தற்போது தனியார் சிமெண்ட்டின் ஆரம்ப விலை ரூ.550 ஐ தொட்டுள்ளது, நெசவாளர்கள் அதிகம் உள்ள காஞ்சிபுரம் பகுதியில் கழக ஆட்சியில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது தி.மு.க. ஆட்சியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் நெசவாளர்கள் பல இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.

கழக ஆட்சியில் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் தரமானதாக கிடைத்தது. இப்போது திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்களே விநியோகம் செய்யப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி போனது. மக்களின் வரிப்பணத்தை வீணடித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆட்சிக்கு வந்து 60 நாட்களிலேயே கட்டப்பஞ்சாயத்து, மணல் கடத்தல், அரசு அதிகாரிகளை மிரட்டுவது, பட்டு கூட்டுறவு சங்கங்களில் கழகத்தினர் தலைவராக இருந்தாலும் அவர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்று மிரட்டும் தோரணையில் பேசுவது இதுபோன்ற செயல்களால் திமுகவை மக்கள் வெறுத்து உள்ளனர். இதனால் மக்களின் ஆதரவு நமக்கு அதிகரித்து இருக்கிறது.

உள்ளாட்சி தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெறுவது உறுதி. நாம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு உள்ளாட்சி பதவிகளை கைப்பற்றுவோம். ஆயிரம் பச்சோந்திகள் படை மாறலாம். ஒரு தொண்டன் கூட நிறம் மாற மாட்டான். கழகத்தை ஒடுக்க நினைப்பவர்களின் எண்ணம் பலிக்காது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கூறியது போல இன்னும் 100 ஆண்டுகள் கழகம் மக்கள் பணி செய்து கொண்டிருக்கும்.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம் பேசினார்.