தற்போதைய செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகம் சார்பில் நிவாரண உதவி – முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி உறுதி

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கழகத்தின் சார்பில் நிவாரண உதவிகள் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.

காவிரி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேலாக தண்ணீர் செல்வதால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கலைமகள், மணிமேகலை, இந்திரா நகர் ஆகிய இடங்களில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கழக அமைப்பு செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி வெள்ளம் சூழ்ந்துள்ள இடங்களில் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதைத்தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கழகத்தின் சார்பில் உதவிகள் செய்யப்படும். வெள்ளம் வடியும் வரை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு, உடை உட்பட அனைத்து வசதிகளும் கழகத்தின் சார்பில் செய்து தரப்படும். வரும் காலங்களில் வெள்ள பாதிப்பு குறைக்கும் வகையில் கரையோர தடுப்புகள் அமைக்கப்படும்.

பாதிப்படைந்த பொதுமக்களுக்கு விரைவில் வருவாய் துறையினர் சார்பில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டவர்களை அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப அவர்களது இருப்பிடத்திற்கு அருகிலேயே தங்குவதற்கு வசதி செய்து தரப்படும்.

இவ்வாறு குமாரபாளையம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான பி.தங்கமணி தெரிவித்தார்.