தற்போதைய செய்திகள்

கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு தான் அதிகாரம்

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி குறித்து சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதும் அதிகாரம், கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தான் உள்ளது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.

கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று பசுமை வழி சாலையில் உள்ள மனித உரிமைகள் ஆணையம் அருகே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி: எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். மூத்த உறுப்பினர்கள் இருக்கும் போது இவரை அறிவித்தது குறித்து உங்கள் கருத்து.

பதில் : இவை அனைத்தும் கட்சி எடுக்கும் முடிவு. கட்சியை பொறுத்தவரையிலே எல்லா நலனும் பாதுகாக்கும் வகையில் தான் கட்சி எந்த முடிவாக இருந்தாலும் நிச்சயமாக எடுக்கும். இதில் எந்த விதமான உள்நோக்கம் யாருக்கும் கிடையாது.

அனைவரின் நலனையும் பாதுகாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் துணைத்தலைவர் மற்றும் துணை செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். நீங்கள் நினைப்பது போல விமர்சனத்திற்கு இல்லாத ஒன்று.

கேள்வி: அவர் பேரவை தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். என் கருத்தை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளார். இது உங்களுக்கு பின்னடைவாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா.

பதில்: கடிதம் நீங்கள் கூட எழுதலாம். யார் வேண்டுமானாலும் கடிதம் எழுதலாம். கடிதம் எழுதியவர்கள் அங்கீகாரம் பெற்றவர்களா. அதிகாரம் படைத்தவர்களா.

அதன்படி பார்த்தால் அதிகாரம் படைத்த அ.தி.மு.க என்பது இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் கையில் தான் அந்த அதிகாரம் உள்ளது. மற்றவர்கள் எழுதிய கடிதம் அனாமதேய கடிதம் தான்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் கூறினார்.