தற்போதைய செய்திகள்

மதுரையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி

முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணன் வழங்கினார்

மதுரை

மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் வழங்கினார்.

மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பாக மதுரை தெற்கு பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய மாணவ மாணவிகளை படிக்க ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் பெற்றோர்களை மாவட்ட அம்மா பேரவை அலுவலகத்திற்கு வரவழைத்து மதுரை மாநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், மதுரை தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.சரவணன் உதவித்தொகை வழங்கினார். இந்த நிகழ்சியில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைதொடர்ந்து எஸ்.எஸ்.சரவணன் கூறுகையில் மாணவர்களுக்காக சத்துணவு திட்டத்தை புரட்சித்தலைவர் உருவாக்கி தந்தார். அதில் ஏழை மாணவர்கள் பயன் பெற்று இன்றைக்கு உயர்ந்த பதவியில் உள்ளார்கள். அதனை தொடர்ந்து புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாணவர்களுக்கு மடிக்கணினியுடன் 14 வகை கல்வி உபகரணங்களை வழங்கினார். மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கும் வண்ணம் 5000 ரூபாய் வழங்கினார்.

அதனை தொடர்ந்து அம்மா அரசை தலைமை தாங்கி நடத்தி வந்த எடப்பாடியார் இந்திய திருநாட்டில் யாரும் செய்திடாத வண்ணம் ஒரே ஆண்டில் 11 மருத்துவக்கல்லூரிகளை உருவாக்கினார். மேலும் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பு கிடைத்திட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை கொண்டு வந்தார் இதன் மூலம் ஏழை, எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர் இது போன்ற திட்டங்கள் மூலம் இந்தியாவிலேயே தமிழகத்தில் உயர் கல்வி சேர்கை 51 சதவீதமாக இருந்தது

தி.மு.க தேர்தல் அறிக்கையில் மாணவர்கள் கடனை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். இதுவரை ஆட்சி அமைத்து 14 மாதங்கள் ஆகிறது வாய் திறக்க மறுத்து வருகின்றனர். அதேபோல் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். தேர்தல் அறிக்கையில் மக்களைத்தான் ஏமாற்றினார்கள். தற்போது மாணவர்களையும் தி.மு.க அரசு ஏமாற்றி வருகிறது. நிச்சயம் மாணவர்கள் எதிர்பார்க்கும் மாணவர்களால் அன்பாக அழைக்கப்படும் ஆல் பாஸ் முதல்வர் எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வருவார். மாணவ சமுதாயத்துக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை உருவாக்குவார் என்று கூறினார்.