சிறப்பு செய்திகள்

எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் -கழக இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பு

சென்னை,

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ, சட்டமன்ற கட்சி செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. ஆகியோர் கழக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து கழக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு வருமாறு:-

கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை, ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலை, கிரவுன் பிளாசா சென்னை அடையார் பார்க் ஓட்டலில் 17.07.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, கழக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கழகத்தின் சார்பில், சட்டமன்ற கட்சி துணைத்தலைவர் பதவிக்கு முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், கழக அம்மா பேரவை செயலாளரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற கட்சி செயலாளராக முன்னாள் அமைச்சரும், கழக விவசாயப்பிரிவு செயலாரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கழக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்து உள்ளார்.