சிறப்பு செய்திகள்

மின்கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று ஸ்டாலின் சொன்னாரா இல்லையா -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை,

திறமை இல்லை என்றால் ஏன் ஆட்சி செய்கிறீர்கள் என்று தி.மு.க. அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ள முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், ஆட்சிக்கு வந்தால் மின்கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று ஸ்டாலின் சொன்னாரா இல்லையா, பதாகையை பிடித்து போராட்டம் செய்தாரா இல்லையா? என்றும் கூறி உள்ளார்.

கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று பசுமை வழி சாலையில் உள்ள மனித உரிமைகள் ஆணையம் அருகே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் வருமாறு:-

திறமை இல்லை என்றால் ஏன் ஆட்சி செய்கிறீர்கள். எதற்கு பொருளாதார நிபுணர்களை நியமித்தீர்கள். 9 பேரை போட்டு அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து அளித்தீர்கள். தமிழகத்தில் தேனும், பாலும் ஆறாக ஓடும் என்று சொன்னீர்கள். அவர்களின் அறிக்கை எங்களை.

பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்துவது தொடர்பாக நல்ல ஆலோசனைகளை தெரிவித்தார்களா. அரசின் கருவூலத்தை நிரப்புவதற்கு ஏதாவது வழி வகைகளை தெரிவித்தார்களா. கிட்டதட்ட ஒரு வருடம் ஆகிறது.

தனி நபர் வருமானம் உயர்வதற்கு எந்த வழியும் இல்லை. தமிழகத்தின் பொருளாதாரம் உயர்வதற்கு எந்த வழி வகையும் இல்லை. ஆனால் பொருளாதார நிபுணர்களை நியமித்து விட்டோம் என்று பெருமை அடித்துக்கொள்கிறீர்கள்.

நாங்கள் அதே நிதி நிலைமையில் சலுகையையும் அளித்தோம். மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. மத்திய அரசு சொல்லியும் நாங்கள் அதனை கேட்காமல் மக்களுக்கு சலுகையும் அளித்து, மின் கட்டணத்தை உயர்த்தாமல் இருந்த அரசு நல்லரசா.

மத்திய அரசின் மீது பழியை போட்டு விட்டு, மின்சார வாரியத்தை இருளில் தள்ளி மக்களுக்கு சுமை அளிக்கும் வகையில் மின்கட்டணத்தை ஏற்றுவது ஒரு சரியான அரசா. திறமையில்லாத அரசு. இது வெளிப்படையாக தெரிகிறது.

கேள்வி: மற்ற மாநிலங்களை பார்க்கும் போது தமிழகத்தில் மின்கட்டணம் குறைவு என்று தெரிவித்துள்ளாரே

பதில்: இது கேட்டுக்கேட்டு புளித்துப்போன விஷயம். தேர்தல் அறிக்கையில் ஸ்டாலின் என்ன தெரிவித்தார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மின்கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று சொன்னாரா இல்லையா. பதாகையை பிடித்து போராட்டம் செய்தாரா இல்லையா. எதற்கெடுத்தாலும் மற்ற மாநிலத்தோடு ஒப்பிடுவது சரியான விஷயம் இல்லை.

எங்கள் ஆட்சியில் மின் கட்டணத்தை உயர்த்தவில்லை. மத்திய அரசு சொல்லியும் நாங்கள் செவி சாய்க்கவில்லை. அதே நேரத்தில் சலுகையும் நாங்கள் அளித்தோம்.

இது எப்படி எங்களால் முடிந்தது. இந்த அரசாங்கத்திற்கு நிர்வாகத்தை சீர்படுத்தி, செம்மைப்படுத்தி நல்ல அளவுக்கு மின்வாரியத்தை கொண்டு செல்வதற்கு பதிலாக திறமையற்ற வகையில் ஆட்சி செய்து வருகிறது என்பது வருத்தத்துக்குரிய கண்டனத்துக்குரிய விஷயம் இது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.