தற்போதைய செய்திகள்

கொரோனா வைரஸ் தொடர்பாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – பேரவையில் முதலமைச்சர் தகவல்

சென்னை:-

கொரோனா வைரஸ் தொடர்பாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், கொரோனா வைரஸ் நோயை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலளித்து பேசியதாவது;-

கொரோனா வைரஸ் வெளிமாநிலத்திலிருந்தும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்கும் தான் உள்ளது. இங்குள்ளவர்களுக்கு இல்லை. அரசு அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதால யாரும் அச்சப்பட தேவையில்லை.

பஸ் நிலையம், விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதியில் வைரஸ் நோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே அங்கெல்லாம் பரிசோதனை செய்து, கட்டுப்படுத்தி இருக்கிறோம். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.

சட்டமன்ற விடுதியில் சட்டமன்ற உறுப்பினர்களை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டீர்கள். அது செய்யப்படும். அதுபற்றி சபாநாயகர் தெரிவிப்பார்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேரவை தலைவர் தனபால் சட்டமன்ற விடுதிக்கு வரும் பார்வையாளர்களை பரிசோதனை செய்ய ஏற்கனவே உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் இங்கு வரும் போது அவர்களுக்கும் கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.